நடிகர் சங்க கட்டிட வேலைகள் மீண்டும் ஆரம்பம்

தென்னிந்தியத் திரையுலகத்தின் மூத்த சங்கமாக தென்னிந்திய நடிகர் சங்கம் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது. பழம்பெரும் இயக்குனர் கே.சுப்ரமண்யம் முயற்சியில் உருவான இந்த சங்கம், 1952ம் ஆண்டு எம்ஜிஆர் நேரடியாக தலையிட்டதன் மூலம் முழுமையாக சங்கமாக பதிவிடப்பட்டு, அவர் அளித்த நன்கொடை மூலம் செயல்பட ஆரம்பித்தது.

நீண்ட காலமாகவே இந்த சங்கத்திற்கென பிரம்மாண்டமான கட்டிடம் கட்டும் வேலைகளுக்கான முயற்சிகள் நடந்து வந்தது. ஆனால், இந்த இடத்தை தியேட்டர் நிறுவனம் ஒன்றிற்கு குறைந்த கட்டணத்தில் 'லீஸ்' அளிக்க அப்போதைய சங்கத் தலைவர் சரத்குமார் முயன்றதாக 2012ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

2015 ம் ஆண்டு நாசர் தலைமையில் நிர்வாகக் குழு அமைந்து நடிகர் சங்க இடத்தை சட்ட ரீதியில் மீட்டெடுத்தது. அதன்பின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் ஆரம்பமாகின. அவர்களது நிர்வாக முறை முடிந்த பிறகு அடுத்த தேர்தல் நடைபெற தாமதமாகியது. இருப்பினும் அடுத்து நடந்த தேர்தலிலும் நாசர் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெற்றது.

கட்டிடம் கட்டுவதற்கான தேவையான நிதி இல்லாத காரணத்தால் மீண்டும் கட்டிடப் பணிகள் ஆரம்பமாவது தள்ளிப் போய்க் கொண்டே வந்தது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், விஜய், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிக்காக தலா 1 கோடி ரூபாய் நிதியுதவியை வழங்கினர்.

இந்நிலையில் இன்று நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணி மீண்டும் ஆரம்பமாகியது. சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் அப்பணிகளைத் துவக்கி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.