ராகுல் காந்தி ஒரு பக்குவமற்ற அரசியல்வாதி… கடுமையாக சாடிய பினராயி விஜயன்; இந்தியா கூட்டணியில் குழப்பம்…?

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கடந்த 19-ந்தேதி 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதல்கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து, ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும், மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலும் நடைபெறும்.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கண்ணூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடினார்.

நாட்டில் பல தீவிர அரசியல் முன்னேற்ற விசயங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, ராகுல் காந்தி இந்தியாவில் இருப்பது இல்லை. அவர் ஒரு தீவிர அரசியல்வாதி இல்லை. இதுவே நாட்டிலுள்ள மக்களின் அனுபவம். இதுபற்றி நாம் விமர்சிப்பதில் இருந்து விலகியே இருக்கிறோம்.

ஏனெனில், அவர் வேறொரு கட்சியில் இருந்து வந்தவர். அது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். ஆனால், பொது தேர்தல் நடக்க கூடிய நேரமிது. இந்த தருணத்தில், அவர் கேரளாவுக்கு வந்து மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருப்பது அவர் பக்குவமற்றவர் என காட்டுகிறது என கூறியுள்ளார்.

இதற்கு முன் கேரளாவில் தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசும்போது, பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளபோது, அவரை மத்திய விசாரணை அமைப்புகள் ஏன் விட்டு வைத்திருக்கிறது? என கேட்டார். வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை எல்லாம் அவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றனர் என்றும் பேசினார்.

இதேபோன்று, இடதுசாரி ஜனநாயக முன்னணியின் எம்.எல்.ஏ. பி.வி. அன்வர் கூறும்போது, உண்மையில் நேரு-காந்தி குடும்பத்தில் பிறந்தவரா? என ராகுல் காந்திக்கு மரபணு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.

இதுபற்றி கருத்து எதுவும் கூற பினராயி விஜயன் மறுத்து விட்டதுடன், ஒருவர் என்ன கூறுகிறார் மற்றும் செய்கிறார் என்பதற்கு வலிமையான பதிலடியை பெறுகிறார் என்று கூறினார்.

அன்வர் கூறும்போது, காந்தி என்ற பெயரை பயன்படுத்தும் உரிமையை ராகுல் காந்தி இழந்து விட்டார். நேரு-காந்தி குடும்பத்தில் பிறந்த ஒருவர், ராகுல் காந்தியை போன்று செயல்பட முடியாது என்றும் கூறினார். ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து, இந்தியா கூட்டணி என்ற பெயரில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகின்றன.

இதில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் அங்கம் வகிக்கிறது. எனினும் பினராயி விஜயன் தலைமையிலான அக்கட்சி, காங்கிரசுக்கு எதிராக பேசுவதும், பினராயிக்கு எதிராக காங்கிரசார் பேசுவதும் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், அவருக்கு எதிராக பிரியங்கா காந்தியும் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி பேசினார்.

கேரளாவின் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன், காங்கிரஸ் வேட்பாளர் ஆன்டோ அந்தோணிக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, பேரணியில் அவர் உரையாற்றும்போது, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் சமரசம் ஆகி விட்டார்.

அவர், பழமையான காங்கிரஸ் கட்சியை மட்டுமே தாக்கி பேசி வருகிறார். ராகுல் காந்தியையும் தாக்கி பேசுகிறார். ஆனால், பா.ஜ.க.வை பற்றி பேசுவது இல்லை.

விஜயனின் பெயர் லைப் மிஷன் திட்டம், தங்க கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல்களில் அடிபட்டு உள்ளது. ஆனால், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்தவித வழக்கையும் எடுத்து கொள்ளவில்லை. சோதனைகளும் நடத்தப்படவில்லை. அல்லது எந்தவித நடவடிக்கையும் அவருக்கு எதிராக நடைபெறவில்லை என்று குற்றச்சாட்டாக கூறினார்.

ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடது சாரி அரசில், போதிய வேலைவாய்ப்புகள் இன்றி, கேரள மக்கள் வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு செல்கின்றனர் என்றும் குற்றச்சாட்டாக கூறினார். கட்சி தொண்டர்களுக்கே வேலைகளை எல்லாம் அவர்கள் கொடுக்கின்றனர். பொதுமக்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுகின்றனர் என்றும் ஆளும் அரசை அவர் கடுமையாக சாடி பேசினார்.

இந்த பிரசாரத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, நில அபகரிப்பு வழக்கில் டி.எல்.எப். நிறுவனத்திற்கும், பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு உள்ள தொடர்பு பற்றி குற்றச்சாட்டாக விஜயன் பேசினார். அவர் பேசும்போது, டி.எல்.எப். நிறுவனத்தில் சி.பி.ஐ. அமைப்பு சோதனை நடத்தியது.

இந்த சோதனைக்கு பின்னர், அந்நிறுவனம் ரூ.170 கோடி மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கியது. இந்த பரிமாற்றத்தில் எந்தவித முறைகேடும் இல்லை என்று பின்னர் கோர்ட்டில் பா.ஜ.க. அரசு கூறியிருந்தது. தேர்தல் பத்திரங்கள் வழியே பா.ஜ.க.வுக்கு பணம் செலுத்தியதும், சி.பி.ஐ. சோதனையும், வழக்கும் முடிவுக்கு வந்தது என அவர் கூறினார்.

ராகுல் காந்தியும் சமீபத்திய பிரசாரத்தின்போது, கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் என இரு முதல்-மந்திரிகள் சிறையில் உள்ளனர். இது கேரள முதல்-மந்திரிக்கு ஏன் நடக்காது? நான் பா.ஜ.க.வை 24 மணிநேரமும் தாக்கி பேசி வருகிறேன். விஜயனோ, 24 மணிநேரமும் என்னை தாக்கி பேசி வருகிறார் என்று கூறினார்.

காங்கிரசுக்கு எதிராக, கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை இறக்கி கடுமையான போட்டியையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், ஓட்டுகள் பிரிந்து செல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளன. அது பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அமைய கூடிய வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

இதேபோன்று, இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தபோதும், அவர்கள் தங்களுடைய மாநிலங்களில் தனித்தனியாகவே போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகளை சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக இறக்கியுள்ளனர். காங்கிரசுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல், கூட்டணிக்கான முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் அக்கட்சிகள் தேர்தலை எதிர்கொண்டுள்ளன.

அக்கூட்டணியில் பிரதமர் வேட்பாளரும் முடிவு செய்யப்படாமல் உள்ளார். இது, பிரசாரத்தில் கட்சிகள் தலைவரை முன்னிறுத்துவதற்கு முடியாத சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற பல காரணங்களால், இந்தியா கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு, பிரசாரத்தின்போது, பா.ஜ.க. இதனை சுட்டி காட்டியும் பேசி வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.