10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் – ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு

தெலுங்கு திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஹரிஷ் சங்கர். பவன் கல்யாண் நடித்த கப்பார் சிங், அல்லு அர்ஜுன் நடித்த துவாடா ஜெகநாதம், ஜூனியர் என்டிஆர் நடித்த ராமையா வஸ்தாவையா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் சில வருடங்களாக பவன் கல்யாண் நடித்து வரும் உஸ்தாத் பகத்சிங் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

2013ல் வெளியான ராமையா வஸ்தாவையா படத்தில் இவருடன் ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றியவர் சோட்டா கே நாயுடு. கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணித்து வரும் சோட்டா கே நாயுடு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குனர் ஹரிஷ் சங்கர், ராமையா வஸ்தாவையா படப்பிடிப்பில் தன்னை நடத்திய விதம் குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

குறிப்பாக ஒளிப்பதிவின்போது தனக்கென எந்த ஒரு சுதந்திரமான யோசனையையும் செயல்படுத்த விடாமல், அவர் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செயல்படுத்தும்படி கூறினார் மேலும் அடிக்கடி என்னுடைய வேலைகளில் குறுக்கீடு செய்தார் என்றும் ஹரிசங்கர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளார்,

இது குறித்து உடனடியாக பதில் அளித்துள்ள ஹரிஷ் சங்கர், “அந்த படத்தில் பணியாற்றிய போது நீங்கள் என்னை பலமுறை இன்சல்ட் செய்தீர்கள். ஒரு கட்டத்தில் உங்களை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு ஒளிப்பதிவாதரை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தலாம் என தீர்மானித்தோம். அதற்கு முன் தான் கப்பார் சிங் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் ஒளிப்பதிவாளரை நீக்கும் அளவுக்கு நான் ரொம்பவே அராஜகமாக நடந்து கொள்வதாக தேவையில்லாத ஒரு கெட்ட பெயர் உருவாகிவிடும் என்பதாலும் தயாரிப்பாளர் தில் ராஜு கேட்டுக் கொண்டதாலும் தான் அந்த படத்தில் உங்களுடன் முழுவதுமாக பணியாற்றிய வேண்டி வந்தது.

ஆனாலும் உங்களைப் பற்றி நான் எங்கேயும் பொதுவெளியில் குறை கூறியது இல்லை. ஆனால் நீங்கள் என்னைப் பற்றி பல இடங்களில் தவறாக கூறி வருகிறீர்கள். இப்போது கூட இந்த பேட்டியில் பேட்டியாளர் என்னைப் பற்றி எதுவும் கேட்காத நிலையில் நீங்களாகவே இப்படி என்மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி உள்ளீர்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.