இந்திய வீரர்கள் ஏன் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? கில்கிறிஸ்ட் கேள்விக்கு சேவாக் அளித்த பதில்

புதுடெல்லி,

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் வழக்கம்போல இந்த வருடமும் அனைத்து அணிகளிலும் நிறைய வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் வெளிநாட்டு மற்றும் இந்திய வீரர்களும் சேர்ந்து விளையாடுவதாலேயே ஐ.பி.எல். என்பது சர்வதேச தொடருக்கு நிகரான தரத்தைக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.

இருப்பினும் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் பணத்தையும் சம்பாதித்துக் கொண்டு இந்திய சூழ்நிலைகளை நன்றாக தெரிந்து கொள்கின்றனர். ஆனால் இந்திய வீரர்களை மட்டும் வெளிநாட்டு தொடர்களில் பி.சி.சி.ஐ. அனுமதிக்காமல் இருந்து வருகிறது. அதனால் வெளிநாடுகளில் நடைபெறும் ஐ.சி.சி. தொடர்களில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டு வருகிறது என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இந்நிலையில் உங்களைப் போன்ற இந்திய வீரர்கள் ஏன் பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை? என சேவாக்கிடம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் கேட்டார். அதற்கு பதிலளித்த சேவாக் பேசியது பின்வருமாறு:-

“வெளிநாட்டில் விளையாட வேண்டிய அவசியமில்லை. நாங்கள் பணக்கார மக்கள். எனவே ஏழை நாடுகளுக்கு நாங்கள் செல்ல வேண்டியதில்லை. இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட நான் ஐ.பி.எல். தொடரில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது பிக்பேஷ் தொடரில் விளையாடுவதற்கான அழைப்பு எனக்கு வந்தது. அதற்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் என்று நான் கேட்டேன்.

அவர்கள் 100,000 டாலர்கள் என்று சொன்னார்கள். ஆனால் அது நான் எனது சுற்றுலாவுக்கு பயன்படுத்தக்கூடிய பணம் என்று அவர்களிடம் சொன்னேன். ஹோட்டல் செலவுக்கு அது போதாது. பிக்பேஷ் போன்ற தொடரில் ஒரு மாதம் விளையாடுவதற்காக உங்களுக்கு 100,000 அல்லது 200,000 டாலர்கள் கொடுக்கப்படுகிறது. எனவே மில்லியன் டாலர்களைப் பற்றி நீங்கள் பேசினால் நான் விளையாட சம்மதிப்பேன். இல்லையென்றால் இல்லை.

ஒருமுறை ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் என்னை வர்ணனையாளராக அழைத்தனர். அதற்கான பணம் உங்களால் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் சொன்னேன். அதற்கு எவ்வளவு என்று கேட்டார்கள். அப்போது ஒரு நாளுக்கு 10,000 யூரோ என்று சொன்னேன். கடைசியில் ஆம் நீங்கள் சொல்வதுபோல் எங்களால் அதை கொடுக்க முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்” எனக் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.