பரம்பரை வரி இந்தியாவில் வேண்டும் என யார் கூறினார்கள்? சாம் பிட்ரோடா கேள்வி

புதுடெல்லி,

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரசின் தலைவரான சாம் பிட்ரோடா அவருடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், அமெரிக்காவில் பரம்பரை வரி விதிப்பது பற்றி ஒரு தனிநபராக நான் கூறிய விசயங்களை ஊடகங்கள் திரித்து விட்டன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி பிரதமர் பரப்பி கொண்டிருக்கும் பொய்களை திசை திருப்பும் வேலையை செய்து விட்டன.

பிரதமரின் தாலி மற்றும் தங்கம் பறிப்பு பற்றிய கருத்துகளிலும் உண்மையில்லை. அமெரிக்க பரம்பரை வரியானது அமெரிக்காவில் மட்டுமே உள்ளது என நான் குறிப்பிட்டேன். தொலைக்காட்சி உரையாடலில் அதனை ஓர் எடுத்துக்காட்டாக எடுத்து பேசும்போது கூறினேன்.

உண்மைகளை நான் குறிப்பிட முடியாதா? மக்கள் இதுபோன்ற விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கவும், விவாதிக்கவும் வேண்டும் என நான் கூறினேன். இதற்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு கட்சியின் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பரம்பரை வரி பற்றி எதுவும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ந்து அவர் வெளியிட்டு உள்ள பதிவில், 55 சதவீதம் எடுத்து கொள்ளப்படும் என யார் கூறியது? இதனை இந்தியாவில் செய்ய வேண்டும் என யார் கூறினார்கள்? பா.ஜ.க.வும், ஊடகங்களும் ஏன் அச்சத்தில் உள்ளன? என்றும் பிட்ரோடா அதில் கேட்டுள்ளார். அவர் தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் பரம்பரை வரி உள்ளது.

ஒருவர் தன்னிடம் உள்ள சொத்துகளை மரணம் அடைந்த பின்னர், அவருடைய குழந்தைகளுக்கு 45 சதவீதம் அளவுக்கு பரிமாற்றம் செய்ய முடியும். 55 சதவீதம் அரசால் பறித்து கொள்ளப்படும். இது ஒரு சுவாரசிய சட்டம்.

இதன்படி, உங்களுடைய தலைமுறையில் நீங்கள் சொத்துகளை சேர்க்கிறீர்கள். அதன்பின் உலகை விட்டு நீங்கள் சென்று விடுவீர்கள். உங்களுடைய சொத்துகளை பொதுமக்களுக்கு விட்டு, விட்டு செல்ல வேண்டும். எல்லாவற்றையும் அல்ல. சொத்துகளில் பாதியை கொடுக்க வேண்டும். இது நியாயம் என்றே எனக்கு தோன்றுகிறது என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் இதுபோன்று எதுவும் இல்லை. இதுபற்றி மக்கள் ஆலோசிக்கவும், விவாதிக்கவும் வேண்டும். சொத்து மறுபகிர்வு பற்றி நாம் பேசும்போது, புதிய கொள்கைகளை, புதிய திட்டங்களை பற்றி நாம் பேசுகிறோம். அது மக்கள் நலனுக்கானது. இது பணக்காரர்களாகவே உள்ளவர்களுக்கான நலன் இல்லை என்று பிட்ரோடா கூறினார். இந்தியாவில், இந்த வரியானது, 1985-ம் ஆண்டில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.

பிட்ரோடாவின் பரம்பரை வரி பற்றிய பேச்சுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. பிரதமர் மோடியின் கெட்ட நோக்கத்துடனான தேர்தல் பிரசாரத்தில் இருந்து திசை திருப்பும் முயற்சியே இதனை பரபரப்பாக்குவதற்கு காரணம் என்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

இதேபோன்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, பரம்பரை வரியை கொண்டு வரும் நோக்கம் எதுவும் கட்சிக்கு இல்லை என்று கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.