செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.24 – ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம் முதல் இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி வரை

தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தமிழகம் உட்பட தென்னிந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில் “அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை அதிகமாக இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேசுபொருளான ‘பரம்பரை சொத்து வரி’ விவகாரம்: இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அனைத்தையும் அல்ல. உங்கள் செல்வத்தில் பாதியை. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது.

இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. 10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை ஒரு புதிய கொள்கையாக, புதிய திட்டமாக பார்க்கிறோம். இதில் அடங்கியிருப்பது, மக்களின் நலன்மட்டுமே; பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல” என்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றி வருகிறது. பிரதமர் மோடி முதல் அமித் ஷா வரையிலான பாஜக தலைவர்கள், இந்தக் கருத்தை தேர்தல் பிரச்சார அஸ்திரமாக பயன்படுத்தி வருகின்றனர்.

“காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்…” – பிரதமர் மோடி: “காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன. இப்போது அது பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்று சொல்கிறது. முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதை சாம் பிட்ரோடா பகிரங்கமாக கூறினார். இப்போது காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துகளுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள். அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும். அப்படியானால், ‘கை’ உங்கள் பிள்ளைகளிடம் இருந்து சொத்துகளை பறித்துவிடும்” என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

சாம் பிட்ரோடோ, காங்கிரஸ் மறுப்பு: ‘பரம்பரை சொத்து வரி’ குறித்த தனது கருத்து சர்ச்சையான நிலையில், சாம் பிட்ரோடா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “55% எடுத்துக்கொள்ளப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவிலும் இது நடக்கும் என்று யார் சொன்னது? பாஜகவும், ஊடகங்களும் ஏன் பதற்றமடைகின்றன? தொலைக்காட்சியில் பேசும்போது, அமெரிக்காவில் உள்ள பரம்பரரை சொத்து வரிச் சட்டம் குறித்து சாதாரணமாகத் தெரிவித்தேன். இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இது காங்கிரஸ் உள்பட எந்த ஒரு கட்சியின் கொள்கையாக இருக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், சாம் பிட்ரோடாவின் கருத்து, கட்சியின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

மோடி பேச்சுக்கு எதிரான புகார் மீது ஆய்வு: பிரதமர் மோடி ராஜஸ்தானில் இஸ்லாமியர்கள் குறித்து பேசியது தொடர்பாக அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகரிக்கும் அழுத்தத்துக்கு இடையே தேர்தல் ஆணையம் ஆய்வைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தனித்தனியே தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது” – ராகுல் காந்தி: டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் பேசிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, “இன்று 90 சதவீத இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. அநீதியைப் பற்றிப் பேசும்போதெல்லாம், நாட்டை பிளவுபடுத்தும் முயற்சி இது என எதிர்க்கிறார்கள். தேசபக்தர்கள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள், சாதிவாரி கணக்கெடுப்பு எனும் எக்ஸ்-ரேக்கு பயப்படுகிறார்கள். நான் உறுதியாகக் கூறுகிறேன். எந்த சக்தியாலும் சாதிவாரி கணக்கெடுப்பை தடுக்க முடியாது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை புரட்சிகரமானது” என்று பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை: “திமுகவின் சமூக நீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமையவுள்ள இண்டியா கூட்டணி அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“அப்பட்டமாக பொய் சொல்கிறார் ராஜ்நாத் சிங்” – ப.சிதம்பரம்: “சகோதர, சகோதரிகளே எனக்கு பிரதமரை நீண்ட நாட்களாக தெரியும். அவருடன் எனக்கு நீண்ட காலம் நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்தது இல்லை” என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியிருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. இதுபோன்ற அப்பட்டமான பொய்களைக் கூறி பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது” என்று கூறியுள்ளார்.

திரவ நைட்ரஜன் உணவுப்பொருள் விற்பனை குறித்து ஆய்வு: கர்நாடகாவில் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்டு சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னையில் ஸ்மோக் பிஸ்கட் உள்ளிட்ட திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் விற்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆய்வுக்கு பின் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவுக்கு ஐகோர்ட் கேள்வி: பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்துதான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும்போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்?” என்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

விவிபாட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உச்ச நீதிமன்றம். புதன்கிழமை நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது, “விவிபாட் இயந்திரத்தில் மைக்ரோ கன்ட்ரோலர் பொருத்தப்பட்டுள்ளதா அல்லது கன்ட்ரோல் யூனிட்டில் பொருத்தப்பட்டு உள்ளதா? மைக்ரோ கன்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் ப்ரோகிராம் செய்யக் கூடியதா?” ஆகிய கேள்விகளை தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினர்.

நீதிபதிகளின் உத்தரவுப்படி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், “வாக்குப்பதிவுக்கு முன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரம் தனித்தனியாக சேமிக்கப்படும். வாக்குப்பதிவுக்குப் பிறகு, அவை ஒரு யூனிட்டாக சேமிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கன்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் இயந்திரம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரம் ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும்.

கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் மற்றும் விவிபாட் ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கன்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை நேரடியாக (Physical) அணுக முடியாது. ஏனென்றால், அனைத்து மைக்ரோ கன்ட்ரோலர்களும் ஒருமுறை ப்ரோகிராமிங் செய்யப்பட்டவை. அவற்றை மாற்ற முடியாது. மேலும், மின்னணு வாக்குப்பதிவின் ஃபிளாஷ் மெமரியில் 1,024 சின்னங்கள் வரை பதிவேற்றம் செய்ய முடியும்” என்று விளக்கமளித்தனர்.

பரம்பரை சொத்து வரி விதிக்கும் திட்டம் இல்லை-காங்.,: “பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை. அதுபோன்ற சிந்தனையும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி”: பாஜகவினர் வளர்ச்சியைப் பற்றி பேச மாட்டார்கள். அவர்கள் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாக, பாஜக தலைவர்கள் மக்களுக்கு சற்றும் சம்பந்தமில்லாத பிரச்சினைகளை கொண்டு வருவார்கள். அதாவது, உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே இவ்வாறு பேசி வருகிறார்கள். இந்த மக்களவைத் தேர்தல் என்பது ஜனநாயகத்தையும், இந்திய அரசியலமைப்பையும் பாதுகாப்பதற்கான வாய்ப்பு” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பெரிய சைஸில் விளம்பரம் வெளியிட்ட பதஞ்சலி நிறுவனம்: உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து செய்தித்தாள்களில் பெரிய சைஸில் மன்னிப்பு விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்டுள்ளது பதஞ்சலி நிறுவனம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.