டி20 உலகக்கோப்பை: அவருக்கான விசா மற்றும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன் – சேவாக்

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

முன்னதாக 2020-ல் நடைபெற்ற 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா பைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடினார். குறிப்பாக 2023 சீசனில் அதிவேகமான அரை சதமடித்து சாதனை படைத்த அவர் 625 ரன்கள் விளாசினார்.

அப்படி ஐ.பி.எல். தொடரில் அட்டகாசமாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். அதைத் தொடர்ந்து சீனாவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளுக்கு எதிரான காலிறுதியில் சதமடித்து சிறப்பாக விளையாடிய அவர் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவினார்.

குறிப்பாக கடந்த மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் அடித்த ஜெய்ஸ்வால் 4 – 1 (5) கணக்கில் இந்தியா தொடரை வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருதை வென்றார். அதை விட அத்தொடரில் பெரும்பாலான போட்டிகளில் 50, 100, 150, 200 ரன்களை ஜாம்பவான் சேவாக்போல சிக்சர் அல்லது பவுண்டரியுடன் தொட்டார். அதனால் இடக்கை சேவாக்போல ஜெயஸ்வால் அசத்துள்ளதாக ஒப்பீடுகளும் பாராட்டுகளும் காணப்படுகின்றன.

இந்நிலையில் ஜெய்ஸ்வால் எப்போதும் தம்மை போல் வர முடியாது என்று தெரிவிக்கும் சேவாக் அவருக்கு 2024 டி20 உலகக்கோப்பையில் வாய்ப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

“என்னுடைய ஆரம்ப காலத்தில் நான் சச்சினுடன் ஒப்பிடப்பட்டேன். ஒப்பிடுகள் உங்களுக்கு வலியை கொடுக்கும். என்னால் சச்சின்போல செயல்பட முடியாது. அப்படி ஒப்பிட்டபோது நான் என்னுடைய பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்தேன். அப்போது நான் சச்சின்போல பேட்டிங் செய்வதாக சொல்வதை மக்கள் நிறுத்தினார்கள்.

இந்தப் பையன் (ஜெய்ஸ்வால்) மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. சிறிய ஊரிலிருந்து நீங்கள் வரும்போது கடினமாக உழைக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் மீண்டும் அங்கேயே சென்று விடுவீர்கள். இந்த நேரத்தில் உலகக்கோப்பையில் அவர் விளையாடுவதற்கான விசா மற்றும் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.