Ghilli: "`ஷா லா லா' பாட்டை பயந்துக்கிட்டே எழுதினேன்! இதுதான் அதுக்கு இன்ஸ்பிரேஷன்!" – பா.விஜய்

90ஸ் கிட்ஸ்களால் குதூகலமாகக் கொண்டாடப்பட்ட `கில்லி’ படத்தின் `அப்படிப்போடு…’, `ஷா லா லா…’ பாடல்கள் ரீ-ரிலீஸால் இந்த முறை 2கே கிட்ஸிடமும் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

குறிப்பாக, ‘ஷா லா லா’ பாடலை செம்ம வைபுடன் ஆட்டம்போட்டு வைரலாக்கி வருகிறார்கள். இந்த நிலையில், இந்த இரண்டு ஹிட் பாடல்களையும், ‘காதலா காதலா’ என்ற சிறிய பாடலையும் எழுதிய பாடலாசிரியர் பா.விஜய்யிடம் பேசினேன். உற்சாக மோடிலேயே அவரிடமிருந்து வருகின்றன வார்த்தைகள்…

கில்லி

“எத்தனையோ படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கேன். ஆனா, ‘கில்லி’ வாழ்க்கையில மறக்கமுடியாத படம். ‘கில்லி’ ரிலீஸ் டைம்லதான், என் முதல் மகன் விஷ்வா பிறந்தான். ‘கில்லி’ ஹிட், குழந்தை பிறந்ததுன்னு டபுள் சந்தோஷத்துல மிதந்துட்டிருந்தேன். இப்போ, என் மகன் காலேஜ் போய்க்கிட்டிருக்கான். இத்தனை வருஷத்துக்கப்புறமும் ‘கில்லி’ கொண்டாடப்படுறது புது எனர்ஜியைக் கொடுக்குது. தரணி சார், வித்யாசாகர் சார் கூட ஏற்கெனவே, ‘தில்’, ‘தூள்’ படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருந்தேன். ரொம்ப சக்சஸ்ஃபுல்லான கூட்டணிங்கிறதாலயும், விஜய் சார் நடிச்சதாலயும் ‘கில்லி’க்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்துச்சு. அந்த எதிர்பார்ப்புடனே ‘அப்படி போடு’, ‘ஷா லா லா’ பாடல்களை எழுதினேன்.

பொதுவா, ஹீரோயினுக்காக எழுதுற பாடல் பெருசா ஹிட் ஆகாது. ஜோதிகா மேடம் ஆடின ‘மேகம் கருக்குது’ மாதிரியான ஒரு சில பாடல்கள்தான் ஹிட் ஆகிருக்கு. அதேமாதிரி, எல்லா படத்திலும் ஹீரோவுக்குதான் ஓப்பனிங் பாட்டு வரும். ஆனா, ‘கில்லி’ படத்துல ஹீரோயினுக்கும் ஓப்பனிங் பாட்டு உண்டு. அதனால இது ஹிட் ஆகுமா, ஆகாதாங்கிற பயத்தோடவேதான் ‘ஷா லா லா’ பாட்டை எழுதினேன். அப்ப படத்துல ‘அப்படிப் போடு’தான் பெரிய ஹிட்டு. ‘ஷா லா லா’ அஞ்சாவது இடத்துல இருந்துச்சு.

ஆனா, இப்போ அந்தப் பாட்டு நம்பர் ஒன்ல இருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. எல்லோடும் கொண்டாடித் தீர்க்குறாங்க. ‘அப்படிப் போடு’ பாட்டுக்கும் டான்ஸ் ஆடி தியேட்டரை அதிரவைக்குறாங்க. ஒரு புது பாட்டு மாதிரி 2கே கிட்ஸ் வரவேற்பைக் கொடுக்கிறாங்க” என்று உற்சாகமாகப் பேசுபவரிடம், “பாடல்களின் வெற்றிக்குப்பிறகு விஜய் என்ன சொன்னார்?” என்றோம்.

கில்லி

“கில்லி வெற்றி விழாவை, விஜய் சாரோட வீட்ல பெருசா கொண்டாடுனாங்க. விஜய் சார் என்னையும் இன்வைட் பண்ணியிருந்தார். அந்தக் கொண்டாட்ட நிகழ்வுல படத்தோட பாடல்களைப் போட்டு எல்லோரும் டான்ஸ் பண்ணினோம். அப்போதான், விஜய் சாரைப் பார்த்தேன். அதுக்கப்புறம் பார்க்கிறதுக்கான சூழல் அமையல. அப்ப நான் பயங்கர பிஸி. ஒரு வருடத்துக்கு 300 பாட்டு எழுதிட்டிருந்தேன். விஜய் சாரும் அதைவிட பிஸியா இருந்தார். தனியா சந்திச்சு பேசுற மாதிரியான சூழல் அமையல…” என்கிறவர், இரண்டு பாடல்களையும் எழுதிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“தரணி சார், என்கிட்ட பாடல்கள் கேட்கும்போது `16 வயதினிலே’ படத்துல ஶ்ரீதேவி மேடம் `செந்தூரப்பூவே’ பாட்டைப் பாடுற மாதிரிதான், த்ரிஷாவுக்கு சிச்சுவேஷன் இருக்கு. அதுக்கேத்தமாதிரி பாட்டு வேணும். `செந்தூரப்பூவே’ பாட்டுல `என் மன்னன் எங்கே… என் மன்னன் எங்கே?’ன்னு வரும். அந்த மாதிரி ஓப்பனா இருக்காம மறைமுகமா லைன்ஸ் வேணும்’ன்னு அவரோட ஸ்டைல்லயே விளக்கிச் சொன்னாரு.

இன்னைக்கு இருக்கிற, ஒரு ட்ரெண்டி கேர்ள் தனக்கானவன் எங்கிருக்கான்னு தேடுற மாதிரி ‘ஹைதர் கால வீரன்தான் குதிரை ஏறி வருவானோ, காவல் தாண்டி என்னைத்தான் கடத்திக்கொண்டு போவானோ’ அப்படின்னு எழுதினேன். இந்த கமர்ஷியல் பாட்டுல ‘பாரதி போல தலைப்பாகை கட்டியதே தீக்குச்சி, நெருப்பில்லாமல் புகை வருதே அதிசயமான நீர்வீழ்ச்சி’ன்னு கவிதையான வரிகளையும் சேர்த்தேன். பாடகி சுனிதி சௌகான் இனிமையான குரல்ல பாடியிருப்பாங்க. ரொம்ப ஆளுமையோடும் அதேநேரம் இளம்பெண்ணுக்கே உரிய துரு துருப்பையும் குரலில் கொண்டுவந்திருப்பாங்க.

கில்லி

அதேமாதிரி, ‘அப்படிப் போடு’ பாட்டுக்கு முதல்வரியா ‘இந்த நடை போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா’ன்னுதான் பல்லவியே எழுதினேன். ‘இந்த வரி பல்லவியோட இறுதியிலதான் வரும். ஆரம்பத்துல வர்ற மாதிரி கேட்சியா லைன்ஸ் சொல்லுங்க’ன்னு வித்யாசாகர் சார் கேட்டார். அதுக்கப்புறம்தான், ‘அப்படிப் போடு’ லைனைச் சேர்த்தேன். அவரும் ஹேப்பியா ஏத்துக்கிட்டார். இந்தப் பாட்டுக்கு முதல்ல சரணம் பண்ணிட்டுதான் பல்லவி கம்போஸ் பண்னோம். ரிவர்ஸ்ல கம்போஸ் பண்ண பாட்டு இது.

‘ஒக்கடு’ படத்துல ‘அப்படிப் போடு’ மாதிரி ஒரு பாட்டு இருக்கும். ஆனா, இந்தளவுக்குப் பெரிய ரீச் இல்ல. ‘அப்படிப் போடு’ ஹிட்டுக்கப்புறம் நாங்க அதேமாதிரி, நிறைய ட்ரை பண்ணோம். ஆனா, அந்த மாதிரி எந்தப் பாட்டும் அமையல. ஒரேயொரு சூரியன் இருக்க மாதிரி, ஒரேயொரு ‘அப்படிப் போடு’தான்.

நான் எழுதின பாடல்களில் தரமான பாட்டுன்னா ‘ஒவ்வொரு பூக்களுமே’, கமர்ஷியலுக்கு ‘அப்படிப் போடு’ன்னு தான் சொல்வேன். ‘ஷா லா லா’, ‘அப்படிப் போடு’ ரெண்டு பாட்டையும் மூணு மணிநேரத்துலேயே எழுதி முடிச்சுட்டேன். ரெண்டுமே ட்யூனுக்கு எழுதாம, எழுதிட்டு அதுக்கேத்த மாதிரி ட்யூன் அமைச்ச பாடல்கள். ‘கில்லி’ படத்துக்கப்புறம் தரணி சார், எனக்கு மிகப்பெரிய ரசிகராவே மாறிட்டார். ஏன்னா, ‘கில்லி’ படத்தோட வெற்றிக்குப் பாடல்கள் முக்கிய காரணமா அமைஞ்சதா அவர் நினைச்சார்” என்றவரிடம், “ரீ-ரிலீஸ் ஆனதும் படம் பார்த்தீங்களா?” என்றேன்.

வித்யாசாகருடன் பா. விஜய்

“திருவிழாவுக்கு ஊருக்குப் போயிட்டு இப்போதான் சென்னைக்கு வந்தேன். இனிமேல்தான் என் மகன்களோட பார்க்கலாம்னு இருக்கேன். என் பையன் குழந்தையா இருக்கும்போது, காலை உதைச்சு உதைச்சு ‘அப்படிப் போடு’ பாட்டுக்கு ஆடுவான். அழுதான்னா, அவனை குஷியாக்க அந்தப் பாட்டைத்தான் போடுவேன். இப்போ அவன் கல்லூரிக்குப் போயிட்டிருக்க காலத்துல அதை மீண்டும் கொண்டாடுறது மகிழ்ச்சியான விஷயம்” என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.