`2025-ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு; பாஜக-வின் திட்டம் இதுதான்..!' – ரேவந்த் ரெட்டி சொல்வதென்ன?

நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என 89 தொகுதிகளுக்கு நாளை நடைபெறுகிறது. இதில், கடந்த ஞாயிறு அன்று ராஜஸ்தானில் இஸ்லாமியர்களை முன்வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரைதான் தற்போதுவரை பெரும் விவாதப்பொருளாக இருக்கிறது.

மோடி

`அப்பட்டமான வெறுப்பு பேச்சு, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நான்கு நாள்களாகவே வலியுறுத்தல்கள் வந்ததையடுத்து, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அளித்த தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக மோடி மற்றும் ராகுல் காந்தி தரப்பிலிருந்து கட்சித் தலைமை பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் இன்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

இப்படியிருக்க, பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்கு காங்கிரஸ் கொடுக்கப்போவதாக மோடி நேற்று பேசியிருந்த நிலையில், பா.ஜ.க-வின் சித்தாந்த வழிகாட்டி என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டில் (2025) விளிம்புநிலை மக்களுக்கான இட ஒதுக்கீட்டை பா.ஜ.க நீக்கத் திட்டமிட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம்சாட்டியிருக்கிறார்.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி – காங்கிரஸ்

தெலங்கானாவில் காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் 10 ஆண்டுக்கால ஆட்சி மீது குற்றப்பத்திரிகை வெளியிடும் நிகழ்ச்சியில் பேசிய ரேவந்த் ரெட்டி, “மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைமையிலான அரசு செய்வது அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் திட்டம். 2025-ம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் தனது நூற்றாண்டை நிறைவு செய்யும். அதையொட்டி, 2025-ல் பட்டியல் (SC), பழங்குடியின (ST) மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் (BC) இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய பா.ஜ.க முயற்சி செய்துகொண்டிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

இட ஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் பலமுறை கருத்து தெரிவித்திருக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்யத்தான் பா.ஜ.க 400 இடங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது. பா.ஜ.க-வின் இந்தத் திட்டத்தையும் சிலர் ஆதரிக்கின்றனர். எனவே, இந்தத் தேர்தல் SC, ST, BC மக்களின் இட ஒதுக்கீட்டுக்கான வாக்கெடுப்பு” என்று கூறினார்.

1925-ல் கேசவ் பலிராம் ஹெட்கேவார் என்பவரால் நிறுவப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) 2025-ல் நூற்றாண்டைக் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.