ரிங்கு சிங் மனம் உடைந்துவிட்டார் – தந்தை உருக்கம்

மும்பை,

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கும் நிலையில், துணை கேப்டன் பொறுப்பு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல விக்கெட் கீப்பர்களாக நல்ல பார்மில் உள்ள ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தேர்வாகியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் இந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிங்கு சிங் கழற்றி விடப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஐ.பி.எல். தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 சிக்சர்கள் அடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் பெரும்பாலான போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள், தென் ஆப்பிரிக்க தொடர், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடர்களில் சிறந்த பினிஷராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார்.

இருப்பினும் தற்போதைய ஐ.பி.எல். தொடரில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார் என்ற ஒரே காரணத்திற்காக ரிங்குவை கழற்றி விட்டுள்ள தேர்வு குழு ரிசர்வ் பட்டியலில் மட்டுமே இணைத்துள்ளது.

இந்நிலையில் முதன்மை உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ரிங்கு சிங் மனமுடைந்ததாக அவருடைய தந்தை கான் சந்திர சிங் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“நிறைய நம்பிக்கை இருந்தது. ஆனால் கடைசியில் ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்தியாவின் 11 பேர் கொண்ட அணியில் ரிங்கு தேர்வு செய்யப்படுவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் பட்டாசுகள், இனிப்புகளுடன் காத்திருந்தோம். இப்போதும் ரிசர்வ் பட்டியலில் இடம் கிடைத்தது எங்களுக்கு மகிழ்ச்சி. இருப்பினும் தன்னுடைய அம்மாவிடம் பேசிய ரிங்கு மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தார். மனம் உடைந்துவிட்டார்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.