தாய்லாந்தில் தமிழர்களின் நினைவைப் போற்றும் 'நடுகல்' திறப்பு விழா – அமைச்சர் சிவசங்கர், அப்துல்லா எம்.பி. மரியாதை

பாங்காக்,

இரண்டாம் உலகப்போரின்போது சியாம்(தாய்லாந்து) – பர்மா ரெயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில், தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் “நடுகல்” திறப்பு விழா நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல் என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!

இரண்டாம் உலகப்போரின்போது சியாம்(தாய்லாந்து) – பர்மா ரெயில்பாதை கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின் நினைவைப் போற்றும் ‘நடுகல் விழா’ தாய்லாந்து தமிழ்ச் சங்கம் மற்றும் மலேசியத் தமிழர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் இதற்கென 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

போரில் உயிர்நீத்தோர் மட்டுமல்ல, கடும் கொடுமைகளுக்கு உள்ளாகி, உழைப்பாக உயிரையே ஈந்து மடிந்த இந்தத் தமிழர்களும் நாம் போற்றி வணங்கத்தக்க வீரர்கள்தான்! அவர்களின் நினைவை வரலாற்றில் பதிக்கவே தாய்லாந்து தமிழர்களுடன் இணைந்து தமிழ்நாடு அரசின் இந்த நடுகல் முயற்சி!”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.