Champions Trophy 2025: இந்தியாவின் அனைத்து போட்டியும் இந்த ஒரே மைதானத்தில் நடத்த PCB திட்டம்

சாம்பியன்ஸ் டிராபி 2025: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஒரே மைதானத்தில், அதாவது லாகூரில் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தமுறை ஐ‌சி‌சி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) தொடரை நடத்தும் உரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தான், போட்டி நடைபெறும் இடங்களை இறுதி செய்து வருகிறது.

ஐ‌சி‌சி சாம்பியன்ஸ் டிராபி 2025 அட்டவணை?

50 ஓவர் போட்டியாக நடைபெறும் ஐ‌சி‌சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எட்டு அணிகள் பங்கேற்க உள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை இறுதி செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மத்தியில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது. இரண்டு வார நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான போட்டிகளை கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி (Karachi, Lahore, Rawalpindi) மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லுமா?

இருப்பினும், இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு அனுப்புவதா? இல்லையா? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான சுற்றுப்பயணத்தை இந்தியா மறுத்ததற்கான சமீபத்திய உதாரணம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிக பரிசீலனைக்குப் பிறகு, இந்தியாவின் போட்டிகளை லாகூருக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. 

இதன் பின்னணியில் உள்ள காரணம் என்னவென்றால், லாகூர் எல்லையில் உள்ள ஒரு நகரம். இங்கு ரசிகர்கள் வாகா எல்லையை கடந்து தங்கள் அணியின் போட்டியை எந்த சிரமமும் இல்லாமல் பார்க்க முடியும் எனக் கருதுகிறது.

ஆனால் சாம்பியன்ஸ் டிராபிக்காக இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதா என்பது குறித்த இறுதி முடிவு பிசிசிஐயை விட இந்திய அரசாங்கத்தின் கைகளில் இருக்கிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இந்திய அணி போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த முடிவு?

மேலும், ஐ‌சி‌சி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி அடிக்கடி பயணம் செய்யவோ அல்லது இடங்களை மாற்றவோ தேவையில்லை என்பதை ஏற்பாட்டாளர்கள் உறுதி செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் ஒரே ஒரு நகரத்தில் தங்கி, போட்டிக்களில் பங்கேற்பதன் மூலம் பயணச் சிரமங்களைத் தவிர்க்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுகிறது. மேலும் சாம்பியன்ஸ் டிராபியின் வரைபடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (International Cricket Council) அனுப்பியுள்ளதாக பிசிபி சமீபத்தில் தெரிவித்துள்ளது.

இந்த முறை கண்டிப்பாக போட்டியை வெற்றிகரமாக நடத்துவோம் -மொஹ்சின் நக்வி

ஐசிசி உடன் சேர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணையை இறுதி செய்துள்ளோம். மேலும் ஐசிசி நிர்வாகிகள் பாகிஸ்தானின் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்த முறை கண்டிப்பாக போட்டியை வெற்றிகரமாக நடத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் -பிசிபி கோரிக்கை

மேலும் இந்தியா நடத்திய ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. இந்தியாவுக்கு எங்கள் அணியை நாங்கள் அனுப்பினோம் என்பதால், இந்த முறை பிசிசிஐயும் தங்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினார்.

இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்ற பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபியின் தற்போதைய சாம்பியன் பாகிஸ்தான். கடந்த 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வென்றது. 

இந்த முறையாவது சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெறுமா?

சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது இதுவே முதல் முறை. இருப்பினும், அந்த நம்பிக்கை மீது கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. ஏனென்றால் 2008 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடரை நடத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது ஆனால் பாதுகாப்புக் காரணங்களால் அது பின்னர் மாற்றப்பட்டது. அதாவது அந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை தென்னாப்பிரிக்கா 2009ல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.