எரிந்த நிலையில் சடலம் மீட்பு – நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணமும், பரபரப்பு கடிதமும்

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (60) எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதத்தில் ரூபி மனோகரன் எம்எல்ஏ உட்பட சில காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றஞ்சாட்டிய வாசகங்கள் இடம்பெற்றுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே கரைச்சுத்து புதூர் கருத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங். கான்ட்ராக் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். பாரம்பரியமாக காங்கிரஸைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளாக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் கருத்தையா ஜெப்ரின் (28) தனது தந்தையை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறும் உவரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து ஜெயக்குமாரை தேடி வந்தனர். போலீஸார் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் ஜெயக்குமாரின் உடல் எரிந்த நிலையில் கரைச்சுத்து புதூர் கிராமத்திலுள்ள அவரது தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற திருநெல்வேலி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன், அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜெயக்குமாரின் உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்குப்பிறகு முழு விபரங்கள் வெளியே வரும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜெயக்குமார் எழுதிய மரண வாக்குமூலம் கடிதம் தனக்கு அனுப்பப்படவில்லை என்றும் அவர் மறுத்துள்ளார்.

இதனிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தப் பரிசோதனை முழுக்க வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உடலுக்கு முன்னாள் எம்.பி.ராமசுப்பு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் ஜெயக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அவரது உடலை திருநெல்வேலியில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்யவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் போலீஸாரின் மெத்தனப் போக்கை கண்டித்து திசையன்விளை, உவரி, கரைச்சுத்துபுதூர் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடிதத்தின் நகல்கள்:

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.