முன்னாள் முதல்வர் பேசும்போது மைக்கை அணைத்த ம.பி. போலீஸ் அதிகாரியை மிரட்டிய பாஜக எம்எல்ஏ

போபால்: முன்னாள் மத்தியபிரதேச மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் தேர்தல் கூட்டத்தில் பேசும்போது மைக்கை அணைத்த போலீஸ் அதிகாரி ஒருவரை பாஜக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான சுரேந்திர பட்வா மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச முன்னாள் முதல்வரான சிவராஜ் சவுகான், தற்போது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் விதிஷா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட போஜ்பூர் பேரவைத் தொகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சிவராஜ் சவுகான் கலந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது இரவு 10 மணியைத் தாண்டிவிட்டது. ஆனாலும் கூட்டத்தில் சிவராஜ் சவுகான் பேசிக் கொண்டே இருந்தார். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த மண்டிதீப் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி மகேந்திர சிங் தாக்குர், சிவராஜ் சவுகான் பேசிய மைக்கை அணைத்துவிட்டார்.

அப்போது போலீஸ் அதிகாரியைப் பார்த்து ஏன் மைக்கை அணைத்தீர்கள் என்று சிவராஜ் சவுகான் கேட்டார். தேர்தல் நடத்தை விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதால் மைக்கை அணைத்ததாக மகேந்திர சிங் தாக்குர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர பட்வா, கோபத்தில் போலீஸ் அதிகாரியை மிரட்டியுள்ளார். அப்போது சுரேந்திர பட்வா கூறும்போது, “பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கும்போது மைக்கை அணைப்பதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்? உன்னுடைய நடத்தையால் நீ தூக்கி எறியப்படுவாய். மறுபடியும் நீ இங்கு வர முடியாது. இவர் (போலீஸ் அதிகாரி) இங்கு நிறைய பிரச்சினைகள் செய்கிறார்” என்று கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் மைக் ஆன்செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசமுன்னாள் முதல்வர் சுந்தர் லால் பட்வாவின் மருமகன்தான் இந்த சுரேந்திர பட்வா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போலீஸ் அதிகாரியை, எம்எல்ஏ மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனத்தை் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர். விதிஷா மக்களவைத் தொகுதியில் வரும் 7-ம் தேதி 3-வது கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.