Sundar.C Press Meet: "மாளவிகாவால எனக்கும் குஷ்புவுக்கும் வந்த சண்டை; `கலகலப்பு 3' அப்டேட்…"

இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவின் கவனம் ஈர்த்தவர் சுந்தர்.சி.

ஜெயராம், குஷ்பு, கவுண்டமணி எனக் கலகலப்பானக் கூட்டணியுடன் வெளியாகி மெகா ஹிட்டானது அப்படம். எப்போது பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்கலாம். அதே கலகலப்புடன் இன்று ‘கலகலப்பு’ படத்தின் மூன்றாம் பாகத்திற்கு ரெடியாகியிருக்கிறார். விகடன் பிரஸ் மீட்டில் அவரது திரைப்பயணத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்கள், கவுண்டமணியுடனான செட் அனுபவம், விமர்சனங்கள் குறித்து மனம் திறந்து பகிர்ந்து கொண்டார். மிர்ச்சி சிவா, விமல், மாளவிகா, ஹிப் ஹாப் தமிழா தங்களின் மனதிலிருக்கும் கேள்விகளைக் கேட்க, எல்லாவற்றுக்கும் கலகலப்புடன் பதிலளித்தார் சுந்தர்.சி. 

சுந்தர்.சி, மிர்ச்சி சிவா

‘கவுண்டமணி சார் மாதிரிதான் சிவாவும்’

மிர்ச்சி சிவா: ரஜினி, கமல் எனப் பெரிய பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? சாதாரண வசனமும் இவர் பேசினால் பெரிய ஹிட்டாகிவிடும் என்று நீங்கள் நினைக்கும் நடிகர் யார்? 

சுந்தர் சி: “சிவா அவரைத்தான் நான் சொல்லனும்னு மறைமுகமாகச் சொல்கிறார். சீன் எவ்ளோ மொக்கையா இருந்தாலும் அதைவிடவும் மொக்கையா நடிப்பவர் சிவா. சாதாரண வசனமாக இருந்தாலும், அதை அவர் பேசினால் நல்ல காமெடியாகிவிடும். இதெல்லாம் ஒரு வசனமா… அப்டினு செட்ல நிறையபேர் நினைப்பாங்க. அத சிவா பேசுனதும் ஹிட்டாகிடும். ‘கலகலப்பு’ படத்துல அதுமாதிரி நிறைய நடந்திருக்கு.

கவுண்டமணி சார், சீன்ல எதுவுமே இல்லைனாலும், அவராக எதாவது புதுசா பண்ணி அந்த சீனையே பிரமாதமா மாத்திடுவார். ‘அக்கா மகளே இந்து’ வசனம் ரொம்ப சாதாரண வசனம். அதுக்கு ட்யூனெல்லாம் அவரே பண்ணி ஹிட்டாக்கிட்டார். அப்படித்தான் சிவாவும். சாதாரண வசனத்த ஹிட்டாகிடுவார். ‘கலகலப்பு’ 3வது பார்ட் எடுக்கப்போறோம். அதுக்காக ஆவலா காத்துக்கிட்டு இருக்கேன்.”

சிங்கத் தமிழன் – தங்கத் தமிழன்

“சிவா எப்போ போன் பண்ணாலும் ‘ஹலோ சூப்பர் ஸ்டார்’னுதான் சொல்லுவேன். ஆர்.ஜே. பாலாஜியை ‘சிங்கத் தமிழன்’னு கூப்பிடுவேன், அவர் என்னை ‘தங்கத் தமிழா’னு கூப்பிடுவார். சிவா, ஆர்.ஜே இருவரிடமும் இப்படி ஜாலியாகத்தான் பேசுவேன். அவ்வளவு நெருங்கிப் பழகியிருக்கிறோம்.”

சுந்தர் சி, விமல்

விமல்: ‘கலகலப்பு – 3’ எப்போ ஸ்டார்ட்டாகும். அதில் நடிக்கும் நடிகர்கள் யார், யார்? கதாநாயகி யார்?

சுந்தர் சி: “முன்பெல்லாம் படத்தோடு டைட்டில் அறிவிக்கும்போது ரொம்ப சர்ப்ரைஸா இருக்கும். இப்போ அதெல்லாம் இல்லை. அறிவிப்புக்கு முன்னாடியே எல்லாம் வைரலாகிறது. படத்தோட அப்டேட்ல இருக்க சர்ப்ரைஸ் இப்போ இல்லை. போறபோக்கப் பார்த்தா, படத்தோட கதையெல்லாம் முன்னாடியே கேப்பாங்க போல. கொஞ்சமாவது சர்ப்ரைஸ் வேணும். ‘கலகலப்பு -3’ பத்தின அறிவிப்பு சீக்கிரம் வரும். சர்ப்ரைஸா சொன்னாத்தான் அது நல்லா இருக்கும்.”

‘அருணாச்சலம் படத்தின் ஒரிஜினல் டைட்டில் குபேரன்’

“‘அருணாச்சலம்’ படத்துக்கு ‘குபேரன்’ன்னுதான் டைட்டில் வச்சோம். நாங்கள் அப்டேட் கொடுக்கிறதுக்கு முன்னாடியே அந்தப் பெயர் எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சு. அப்பறம் ரஜினி சார்தான், ‘அருணாச்சலம்’னு வைக்கச் சொன்னார். நாங்க அறிவிக்கும் போது ‘அருணாச்சலம்’ன்னு அறிவிச்சோம். படத்தோடு அப்டேட் சர்ப்ரைஸா இருந்தாத்தான் அது நல்லா இருக்கும். இந்தக் காலத்துல எல்லோரும் அந்த சர்ப்ரைஸ மிஸ் பண்றாங்க. 

சுந்தர்.சி விகடன் பிரஸ்மீட்

மாளவிகா: நீங்க அறிமுகப்படுத்திய கதாநாயகி நான். ‘மாளவிகா’னு பெயர் வச்சதும் நீங்கதான். நீங்க நிறையபேர அறிமுகப்படுத்தியிருக்கீங்க. அதுல உங்களுக்குப் பிடிச்ச கதாநாயகி யார்?

சுந்தர்.சி: “நான் அறிமுகப்படுத்துனதுல எனக்குப் பிடிச்ச கதாநாயகி ஸ்வேதாதான் (மாளவிகா). ‘ஸ்வேதா’க்கு ‘மாளவிகா’னு பெயர் வைச்சதால எனக்கும் குஷ்புவுக்கும் பெரிய சண்டையே வந்துச்சு. எங்களுக்குப் பெண் குழந்தைப் பிறந்தால் ‘மாளவிகா’னு பெயர் வைக்கனும்னு குஷ்பு நிறைய யோசிச்சு, பெரிய பெரிய புத்தகத்திலெல்லாம் தேடித் தேடி அந்தப் பெயரை செலக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. நான், ‘உன்னைத் தேடி’ பாடத்தோட பாடலை கம்போஸ் செய்ய தேவா சாரைப் பார்க்கக் கிளம்புனேன். அப்போ குஷ்பு ‘மாளவிகா’னு நம்ம குழந்தைக்குப் பெயர் செலக்ட் பண்ணியிருக்கேன் ‘எப்படி இருக்கு’னு கேட்டாங்க. இந்த பெயர் நல்ல இருக்கேனு அதே பெயரை தேவா சார் கிட்ட சொல்லி ஒரு பாட்டு பண்ணியாச்சு. ஸ்வேதாவுக்கும் அந்தப் படத்துல ‘மாளவிகா’னு பெயர் வச்சாச்சு.

சுந்தர் சி, மாளவிகா

‘மாளவிகா’னு பெயர் வைச்சதால எனக்கும் குஷ்புவுக்கும் பெரிய சண்டை

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் குஷ்புவுக்குக் கோபம் வந்திருச்சு. எனக்கும் அவங்களுக்கும் பெரிய சண்டையே வந்தது. அப்படித்தான் இந்த ‘மாளவிகா’ங்கிற பெயர் வந்தது. அந்தப் பெயரையே அப்படியே அவங்களும் வச்சுக்கிட்டாங்க. அந்தப் படத்துல அவங்களுக்கு நடிக்கவும் தெரியாது, டான்ஸாடவும் தெரியாது. இப்போதான் டான்ஸ், நடிப்பெல்லாம் நல்லா வருது.”

ஹிப்ஹாப் தமிழா: ‘டக்கர் டக்கர்’ பாட்டைப் பாத்துட்டு, ‘இதவே ஒரு படமா எடுத்தா என்ன?’னு சுந்தர் சார் என்கிட்ட சொன்னார். அவர் சொன்ன பிறகு எடுத்த படம்தான் ‘மீசைய முறுக்கு’. நான் இப்படி இருக்கிறதுக்கு அடித்தளம் அமைத்ததுக் கொடுத்தது சுந்தர்.சி சார்தான். அவர்கிட்ட ஒரு கேள்வி, ‘அரண்மனை-4’ படத்தில் ஒரு ‘அம்மன்’ பாடல் பண்ணோம். நாங்க அந்தப் பாடல பண்ணுவோம்னு எப்படி நம்புனீங்க சுந்தர்.சி சார்?”

சுந்தர்.சி: “‘முறை மாமன்’ படத்துல ஒரு பிரச்னை வரும்போது கவுண்டமணி சார் ஜெயராம் கிட்ட ‘எதா இருந்தாலும் நான் பாத்துகிறேனு’ சொல்வார். ஜெயராமும் சந்தேகத்துடன் வேறு வழியில்லாம் ‘சரினு’ சொல்வார்’. நானும் அப்படித்தான் ஆதி கிட்ட சொன்னேன். எனக்கும் அந்தச் சமயத்தில் வேற வழியில்லை. இவங்களத்தான் நம்பியாகனுங்கிறக் கட்டாயம். பொதுவாகவே ஆதிகிட்டயும், ஜீவாக்கிட்டயும் பெரிய தன்னம்பிக்கை இருக்கும். எதையும் பண்ணிடலாம்னு நினைப்பாங்க. நாம செய்யுறதுதான் சரின்னு நினைக்க மாட்டாங்க. அறிவுரை சொன்ன கேட்டுக்குவாங்க, எதையும் கத்துக்குவாங்க. அந்தக் குணம்தான் அவங்கள பெரிய பெரிய உயரத்துக்குக் கொண்டுபோகுது” என்றவர் சுந்தர்.சி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பாரா என்று கேட்டதற்கு, “அவர் பெரிய இலக்கை நோக்கிப் போய்கிட்டிருக்கார். அவரோடு சேர்ந்து நடிக்கிறதெல்லாம் கஷ்டம். அவர் வழி வேற, என்னோட வழி வேற!” என்றார்.

சுந்தர்.சி விகடன் பிரஸ்மீட்

விகடன் நிரூபர்களின் கேள்விகள்:

வித்யா காயத்ரி: கமர்ஷியல் படம் எடுப்பதில் இருக்கும் சிக்கல்கள், சவால்கள் என்ன?

சுந்தர் சி: “கமர்ஷியல் படம் எடுப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. சீரியஸான படங்கள ஸ்கிரிப்ட்ல என்ன இருக்கோ அதை அப்படியே எடுத்துட்டா படம் நல்லா வந்துரும். ஆனால், கமர்ஷியல் படத்துல சீனோட ஐடியாதான் இருக்கும். நாமதான் அதைக் கொஞ்சம் கொஞ்சமா உருவாக்கி எழுதினதவிடவும் புதுசு புதுசா யோசிச்சு எடுக்கணும். எனக்கு சீரியஸான படங்கள் பண்ணுவது ஈசி. கமர்ஷியல் படங்கள் பண்ணுவதுதான் கஷ்டம்.

கமர்ஷியல் படங்களுக்குச் சரியான விமர்சனம் வராது, நெகட்டீவாத்தான் வரும்

கமர்ஷியல் படங்கள் வெளியாகும்போது சரியான விமர்சனம் வராது. நெகட்டிவான விமர்சனம்தான் வரும். ஆனால், படம் நல்லா போகும், வசூல் எடுக்கும். குடும்பங்கள், குழந்தைகளுடன் வந்து படம் பார்ப்பாங்க. ஆனால், விமர்சனத்தில் பயங்கரமாகத் திட்டுவாங்க. இது ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு. போகப்போகப் பழகிடுச்சு. பொதுவாக நான் எந்த நெகட்டீவான விஷயங்களையும் கேட்கிறதில்லை. சோஷியல் மிடியா பக்கமே போறதில்லை. எப்பவும் பாசிட்டீவாத்தான் எதையும் பார்ப்பேன்.” 

தமிழ்ச்செல்வன்: ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் ஒரு மெகா ஹிட் படம். அந்தப் படம் மாதிரி ஒரு படத்தை மறுபடியும் ரீ-கிரியேட் பண்ண முடியுமா?

சுந்தர்.சி விகடன் பிரஸ்மீட்

சுந்தர்.சி: ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்துக்கு இரண்டாவது பார்ட் எடுக்க நானும் கார்த்திக்கும் நிறையப் பேசினோம். கதையும் ரெடியா இருந்தது. ஆனால், அது நாங்க எதிர்பார்த்ததைவிட படம் மெகா ஹிட்டானாது. அதனால அந்தப் பெயரைக் கெடுத்துக்க வேண்டாம்னு அப்படியே விட்டுடோம். நாங்களே நெனச்சாலும் மறுபடியும் அப்படி ஒரு படத்தை ரீ-கிரியேட் பண்றது கஷ்டம்.

அந்தச் சமயத்தில் சீரியஸான கதை ஒண்ணு, அதைப் படம் பண்ணலாம்னு கனவோட இருந்தேன். ஆனால், தயாரிப்பாளருக்கு நடிகை நக்மாவை ரொம்ப பிடிச்சிருச்சு. அதனால் அவங்களுக்கு ஏத்த மாதிரி கதை பண்ணலாம்னு உருவாக்குனதுதான் ‘உள்ளத்தை அள்ளித்தா’. அதன் பிறகுதான் அவங்களுக்குப் பதிலா ரம்பா உள்ளே வந்தாங்க.”

நான் ஒரு தோல்வியுற்ற நடிகர்.

நடிகராக நான் நடிச்ச படங்கள் எல்லாம் தோல்விதான். தொடர்ந்து எட்டு படங்கள் தோல்வி படங்களாச்சு. அதில இருந்து நான் நடிக்கக் கூடாதுனு முடிவெடுத்துட்டேன். என்னோட படங்களில் மட்டும் தவிர்க்க முடியாமா நடிச்சிட்டு இருக்கேன். என்னோட குழந்தைகள்தான் என் படத்தைப் பார்த்து சரியா விமர்சனம் சொல்லுவாங்க.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.