தேர்தல் பணியின்போது மரணமடைந்த அசாம் அதிகாரி குடும்பத்துக்கு ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை

புதுடெல்லி: தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உடல் நலிவடைந்து மரணமடைந்த அசாம் காசிரங்கா மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடி அதிகாரியின் குடும்பத்துக்கு தலைமை தேர்தல் ஆணையர் ரூ.15.3 லட்சம் கருணைத்தொகை கிடைக்கச் செய்துள்ளார்.

அசாமில் கடந்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காசிரங்கா தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் பணியில் சுகுமால் ஜோதி போரா என்பவர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் ஹோஜாய் மாவட்ட சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அடுத்த நாள் குவாஹாட்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 20-ம் தேதி சுகுமால் ஜோதி போரா மரண மடைந்தார்.

இந்நிலையில், அவர் மரணமடைந்து பத்து நாட்கள் கழித்து அவரது மனைவி ஜனதா சோரோங், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார். நடந்தவற்றை விளக்கி தனது குடும்பத்தில் வருமானம் ஈட்டிவந்த ஓரே நபர் மரணமடைந்துவிட்டதால் தானும் தனது மகனும் நிர்க்கதியாக தவிப்பதாக உருக்கமான கடிதத்தை அந்த மின்னஞ்சலில் எழுதியிருந்தார்.

தனது கணவரை காப்பாற்றும் முயற்சியில் ஆம்புலன்ஸ் சேவைக்கு செலுத்திய தொகை மற்றும் கருணை அடிப்படையில் தனக்கு இழப்பீடு தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கோரிக்கையை ஏற்ற தலைமை தேர்தல் ஆணையர், இரண்டே நாட்களில் அவருக்கு உரிய இழப்பீடு கிடைக்க மனிதாபிமான அடிப்படையில் விரைந்து செயல்படுமாறு அசாம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, கடந்த மே 2-ம் தேதி அசாம் தலைமை தேர்தல் அதிகாரியும், ஹோஜாய் மாவட்ட ஆட்சியரும் இணைந்து பாதிக்கப்பட்ட நபரின் இல்லத்துக்குச் சென்று சுகுமால் ஜோதி போராவின் மனைவி ஜனதா சோரோங்கின் வங்கிக் கணக்கில் ரூ.15.3 லட்சம் செலுத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.