உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுப்பு: கள்ளக்காதலியை கொன்று வாலிபர் தற்கொலை

கண்ணூர்,

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் எரமம் அருகே மாதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அனிலா (வயது 33). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அவருக்கும், பள்ளி நண்பரான பிரசாத் என்கிற பிஜு (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது. பிரசாத்தின் நண்பர் பையனூர் அருகே அன்னூரை சேர்ந்த ஜோசப். அவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சுற்றுலா சென்றார்.

அப்போது அவர் தனது வீட்டை பார்த்துக்கொள்ளுமாறும், நாய்களுக்கு உணவு வைக்கும்படியும், இரவில் பாதுகாப்புக்காக அங்கேயே தங்குமாறும் பிரசாத்திடம் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் அவர் நண்பர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 3-ந் தேதி அங்கு அனிலா வந்து உள்ளார். தொடர்ந்து பிரசாத், அனிலா இருவரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.

பின்னர் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கணவரை பிரிந்து விட்டு பிரசாத்துடன் வாழ உள்ளதாக அனிலா தெரிவித்து உள்ளார். இதை பிரசாத் ஏற்க மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாத், அனிலாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். தொடர்ந்து அவரது உடலை அங்கேயே போட்டு விட்டு, அங்கிருந்து இரூளியில் உள்ள தனது வீட்டிற்கு பிரசாத் தப்பி ஓடினார்.

இதற்கிடையே சுற்றுலா சென்ற ஜோசப் செல்போனில் பிரசாத்தை பலமுறை அழைத்தும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். தொடர்ந்து அவர்கள் சென்று பார்த்த போது, வீட்டில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பையனூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் உல்லாசமாக இருந்து விட்டு சேர்ந்து வாழ மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், அனிலாவை பிரசாத் கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கண்ணூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரசாத் வீட்டிற்கு சென்று போலீசார் தேடிய போது, அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.