காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராதிகா கேரா பாஜகவில் இணைந்தார்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ராதிகா கேரா விலகியிருந்தார். இந்நிலையில், இன்று (மே 7) அவர் பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக அவர் இருந்தார். மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அவர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

“ராமர் கோயிலுக்கு சென்ற காரணத்துக்காக கவுசல்யா மாதாவின் மண்ணில் என்னை வசை பாடினர். துஷ்பிரயோகத்துக்கு ஆளானேன். மேலும், என்னை அறையில் வைத்து அடைத்தனர். ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் என்னை சரியான நேரத்தில் காத்தனர். இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்கவே முடியாது” என பாஜகவில் இணைந்த பிறகு ராதிகா தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி ராமர், சனாதனம், இந்து மதத்துக்கு எதிரானது என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை நம்பவில்லை. சமீபத்தில் நான் எனது பாட்டியுடன் அயோத்தி ராமர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயிலுக்குச் சென்று திரும்பிய பிறகு, என்னுடைய வீட்டின் கதவில் ‘ஜெய் ஸ்ரீராம்’ கொடியை ஒட்டி இருந்தேன். அதன் பிறகு காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கத் தொடங்கியது.

ராமர் கோயிலுக்கு சென்று வந்தது தொடர்பான புகைப்படம், வீடியோவை என்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதற்காக காங்கிரஸ் கட்சியினர் என்னை கண்டித்தனர். தேர்தல் நடைபெறும் நிலையில் ஏன் ராமர் கோயிலுக்கு சென்றீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார்கள்.

ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது சத்தீஸ்கர் மாநில காங்கிரஸின் ஊடகப் பிரிவு தலைவர் சுஷில் ஆனந்த் சுக்லா எனக்கு மதுபானம் கொடுத்தார். மேலும் மதுபோதையில் இருந்த அவர் 5 முதல் 6 கட்சி நிர்வாகிகளுடன் வந்து என்னுடைய அறையின் கதவை தட்டினார்.

இதுகுறித்து சச்சின் பைலட், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட தலைவர்களிடம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. காங்கிரஸின் இந்து விரோத சித்தாந்தத்தைப் பின்பற்ற மறுத்ததால் என்னை வெறுத்தார்கள்.

சுஷில் ஆனந்த் சுக்லாவுடன் பேசுவதற்காக ஒரு நாள் மாலை மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அவரும் 2 செய்தித் தொடர்பாளர்களும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினர். ஒரு அறையில் வைத்து என்னை பூட்டினர்.

நான் அழுதபோதும் கதவைத் திறக்கவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு தப்பினேன். ராமரை ஆதரிக்கிறேன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன். எனவேதான் கட்சியிலிருந்து விலகி உள்ளேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.