சீனாவில் மருத்துவமனைக்குள் கத்தி தாக்குதல்: இருவர் உயிரிழப்பு, பலர் காயம்

ஜென்சாங்: சீன நாட்டில் உள்ள மருத்துவமனைக்குள் பதைபதைக்க வைக்கும் வகையிலான தாக்குதல் அரங்கேறியுள்ளது. தெற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்சாங் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கத்தியைக் கொண்டு ஒருவர் தாக்கியுள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்துககுள் அரங்கேறிய வன்முறைச் சம்பவம் என இந்தத் தாக்குதல் குறித்த தகவலை சீன அரசு தரப்பு ஊடகம் உறுதி செய்துள்ளது. தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சியும் வெளியாகி உள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காலை 11 மணியளவில் இந்தத் தாக்குதல் அங்கு நடத்தப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளதாகவும் களத்தில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடந்த இடம் மருத்துவமனை என்பதால் அதன் பாதிப்பும், பதற்றமும் அந்த இடத்தில் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சீனாவில் துப்பாக்கிப் பயன்பாடு சட்டவிரோதமானது. அதனால், அண்மைய ஆண்டுகளாக மக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் கத்தியைக் கொண்டு இதுபோன்ற தாக்குதல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு இதே தெற்கு சீனாவில் மழலையர் பள்ளியின் வாசலில் கத்தியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். 2020-ல் ஆரம்ப பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 37 குழந்தைகள் காயமடைந்தனர். கடந்த 2014-ல் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பலர் இணைந்து கத்தியை ஆயுதமாக பயன்படுத்தி மேற்கொண்ட தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். 133 பேர் காயமடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.