“ஆக.15 முதல் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்” – ராகுல் காந்தி வாக்குறுதி

புதுடெல்லி: “இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியில் இருந்து பல்வேறு அரசு துறைகளில் 30 லட்சம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலையைத் தொடங்கும்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி வியாழக்கிழமை நாட்டின் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியில் பேசியிருக்கும் அதில் ராகுல் கூறியது: “தேர்தல் வெற்றி தன்னிடமிருந்து கைநழுவிப் போனதை உணர்ந்திருக்கும் பிரதமர் மோடி நமது கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யக்கூடும்

அடுத்து அவர் பிரதமராக வர மாட்டார். அதனால் இன்னும் 4-5 நாட்களுக்கு அவர் நமது கவனத்தை திசைத் திரும்பும் முடிவெடுத்திருக்கலாம். அவர், சில நாடகங்களையோ வேறு சில வேலைகளையோ செய்யலாம். ஆனாலும் உங்கள் கவனம் சிதறி விடக் கூடாது. வேலைவாய்ப்பின்மை மிகவும் முக்கியான பிரச்சனை. 2 கோடி வேலைகள் வழங்குவேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனால், அது பொய். அவர் பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி போன்றவற்றையே கொடுத்தார். மேலும், அதானி போன்றவர்களுக்கு சேவை செய்தார்.

நாங்கள் ‘பாரதி பரோசா திட்டத்தை’ கொண்டு வர இருக்கிறோம். இண்டியா கூட்டணி ஜூன் 4-ம் தேதி ஆட்சி அமைக்கும். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ம் தேதியிலிருந்து 30 லட்சம் பணியிடங்களை நிரப்பும் வேலையைத் தொடங்கும். ஜெய் ஹிந்த். வணக்கம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து காங்கிரஸ் கறுப்புப் பணத்தைப் பெற்றுள்ளது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தெலங்கானா மாநிலத்தில் புதன்கிழமை நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “பல ஆண்டுகளாக காங்கிரஸ் இளவரசர் (ராகுல் காந்தி) 5 தொழிலதிபர்களைப் பற்றி பேசினார். பின்னர் அம்பானி, அதானி பற்றி மட்டும் அவர் பேசத் தொடங்கினார். இப்போது அவர்கள் பற்றியும் பேசாமல் திடீர் மவுனம் காத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ராகுல் காந்தி மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் அம்பானி மற்றும் அதானி பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தி விட்டனர். ஏன்?

நான் காங்கிரஸ் இளவரசரிடம் (ராகுல் காந்தி) ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அம்பானி, அதானியிடமிருந்து நீங்கள் எவ்வளவு பணம் பெற்றீர்கள்? நடைபெறும் தேர்தலுக்காக அவர்களிடமிருந்து காங்கிரஸ் கட்சி எவ்வளவு நிதி பெற்றது? எத்தனை வாகனங்களில் பணத்தைப் பெற்றது? ஏதோ ஒன்று நடந்திருப்பதாக நான் உணர்கிறேன்.” என்று பேசினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்த ராகுல் காந்தி, “மோடி ஜி, பயப்படுகிறீர்களா?. பொதுவாக பூட்டிய அறைகளில் தான் அதானி மற்றும் அம்பானியைப் பற்றி பேசுவீர்கள். பொதுவெளியில் அதானி மற்றும் அம்பானி பற்றி நீங்கள் பேசுவது இதுவே முதல்முறை.

அவர்கள் இருவரும் காங்கிரஸுக்கு டெம்போக்களில் பணம் தருகிறார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும். இதில் உங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் எதுவும் இருக்கிறதா?. ஒரு காரியம் செய்யுங்கள். அதானியும், அம்பானியும் காங்கிரஸுக்கு டெம்போவில் பணம் அனுப்பினார்களா என்பதை அறிய சிபிஐ அல்லது அமலாக்கத் துறையை சோதனை நடத்துங்கள். பயப்பட வேண்டாம், மோடி ஜி.” என்று விமர்சித்திருந்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.