மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷண்: விருதை பிரேமலதா பெற்றுக் கொண்டார்

புதுடெல்லி: மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டன. கடந்த ஜனவரியில் விருது பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல்கட்டமாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம், நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதூப் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இந்நிலையில், 2-ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்றுநடைபெற்றது. இந்த விழாவில், மறைந்தநடிகர் விஜயகாந்துக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடி யரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

தமிழகத்தை சேர்ந்த பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா, தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

மறைந்த முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, மகாராஷ்டிராவை சேர்ந்த ‘மும்பை சமாச்சார்’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநர் ஹோர்முஸ்ஜி காமா, குஜராத்தின் ‘ஜென்மபூமி’ பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் குந்தன் வியாஸ், இதயவியல் நிபுணர் அஷ்வின் பாலசந்த் மேத்தா, சத்தீஸ்கரை சேர்ந்த ராம்லால், மேற்கு வங்கத்தை சேர்ந்த மறைந்த சத்யபிரத முகர்ஜி, கேரளாவை சேர்ந்த ராஜகோபால், லடாக்கை சேர்ந்த டோக்டன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழக வீராங்கனை ஜோஷ்னாவுக்கு..: தெலங்கானாவை சேர்ந்த சிற்பக் கலைநிபுணர் வேலு அனந்தாச்சாரி, தமிழக ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா, அந்தமானை சேர்ந்த செல்லம்மாள் மற்றும் ஸ்ரீதர் கிருஷ்ணமூர்த்தி, சத்யநாராயணா பெலாரி, சோம் தாட் பட்டு ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதை குடியரசுத் தலைவர் வழங்கினார்.

இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட விருதாளர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.