2024 Maruti Swift new vs Old :இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன..!

இந்தியாவின் பிரசித்தி பெற்ற மாருதி சுசூகி Swift ஹேச்பேக் ரக மாடலில் 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் மற்றும் பழைய மாடல் என இரண்டையும் ஒப்பிட்டு எவ்வாறு வித்தியாசப்படுகின்றது என்பதனை இப்பொழுது முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

அடிப்படையாகவே அனைத்து வேரியண்டிலும் ஆறு ஏர்பேக்குகள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்றவை உள்ளது.

ஸ்விஃப்ட் டிசைன் மாற்றங்கள்

புதிய 2024 ஸ்விஃப்ட் 3,860 மிமீ நீளம், 1,695 மிமீ அகலம், 1,500 மிமீ உயரம் மற்றும் 2,450 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. முந்தைய மாடலின் வீல்பேசில் மாற்றமில்லை. ஆனால் நீளம் 15 மிமீ, அகலம் 40 மிமீ குறைக்கப்பட்டு, உயரம் 30 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையான முந்தைய மாடலின் டிசைனை தக்க வைத்துக்கொண்டு சில ஸ்டைலிஷயான மாற்றங்கள் மற்றும் மேம்பாடான டிசைன் கூறுகளை மட்டும் பெற்று புதுப்பிக்கப்பட்ட ஸ்விஃப்ட் மாடல் வந்துள்ளது. புதிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட்டில் பகல் நேர ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது.

முன்பக்க கிரில் அமைப்பு, பனி விளக்கு அறை, பம்பர் உள்ளிட்டவற்றில் உள்ள வித்தியாசங்கள் மிகத் தெளிவாக நமக்கு தெரிகின்றது.

பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட டூயல் டோன் 15 அங்குல அலாய் வீல் ஆனது 2024 ஆம் ஆண்டிற்கான மாடல் பெற்றுள்ளது. முந்தைய மாடலை விட சி-பில்லர் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள வளைவுகள் மற்றும் கருமை நிற மேன்ம்பாடுகளை கொண்டுள்ளது.

பின்பக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி டெயில் லைட், பம்பர் உள்ளிட்ட பகுதிகளில் சிறிய அளவிலான ஸ்டைலிங் மாற்றங்களை மட்டுமே கொண்டு வித்தியாசப்படுகின்றது. மற்றபடி, முந்தைய மாடலின் தழுவல் பின்புறத்தில் அதிகமாகவே உள்ளது.

swift old vs new

2024 ஸ்விஃப்ட் இன்டிரியர் மாற்றங்கள்

இன்டீரியரில் வீல் பேசில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதனால் ஹேட்ரூம், லெக்ரூம் உள்ளிட்டவற்றில் எந்த ஒரு மாற்றமும் பெரிதாக ஏற்படுத்தப்படவில்லை.

புதுப்பிக்கப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் மிதக்கும் வகையிலான 9 அங்குல ஸ்மார்ட்புரோ+  இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏசி வென்ட் இடமாறுதல், மற்றும் டேஸ்போர்டின் நிறங்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக புதிய நிறத்திலான இருக்கைகள், மேம்பட்ட சுசூகி கனெக்ட், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜர், யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது.

swift interior old vs new

புதிய 1.2 லிட்டர் என்ஜின்

முந்தைய மாடலில் இடம்பெற்றிருந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 4 சிலிண்டர் பெற்று அதிகபட்சமாக 90 hp மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தியது. இதன் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 22.38 கிமீ மற்றும் ஏஎம்டி மைலேஜ் லிட்டருக்கு 22.53 கிமீ ஆகும்.

புதிய மாடல் 8 hp, 1Nm டார்க் குறைக்கப்பட்டு 4 சிலிண்டருக்கு பதிலாக 3 சிலிண்டர் பெற்ற 1.2 லிட்டர் Z12E என்ஜின் 82 hp மற்றும் 112 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதன் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 24.80 கிமீ மற்றும் ஏஎம்டி மைலேஜ் லிட்டருக்கு 25.72 கிமீ ஆகும்.

முந்தைய மாடலை விட மேனுவல் 2.42 கிமீ கூடுதல் மைலேஜ் வழங்குவதுடன் ஏஎம்டி மைலேஜ் லிட்டருக்கு 3.19 கிமீ வரை உயர்ந்துள்ளது.

மாருதி Swift விலை வித்தியாசம்

சில வாரங்களுக்கு முன்பாக ஸ்விஃப்ட் விலை ரூ.24,000 வரை உயர்த்தப்பட்டு 6.24 லட்சத்தில் முந்தைய மாடல் கிடைத்து வந்த நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மாருதி ஸ்விஃப்ட் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் மற்றும் டாப் வேரியண்ட் முந்தைய மாடலை விட ரூ.36,000 வரை அதிகரிக்கப்பட்டு ரூ.9.50 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.  கூடுதலாக டூயல் டோன் பெற்ற மாடல்களுக்கு 15,000 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

2024 மாருதி சுசூகி ஸ்விஃப்ட் ஆன்ரோடு விலை ரூ.7.88 லட்சம் முதல் ரூ.11.59 லட்சம் வரை அமைந்துள்ளது.

(All price Tamil Nadu)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.