Star Review: சினிமா கனவைத் துரத்தும் இளைஞனின் நெகிழ்ச்சிப் போராட்டம்; டல்லடிக்கிறதா, ஜொலிக்கிறதா?

நடிகர் ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடிக்கொண்டிருக்கும் ஓர் இளைஞன், தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களைப் பேசுகிறது `ஸ்டார்’ திரைப்படம்.

போட்டோகிராபராக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பாண்டியன் (லால்), அவரது மனைவி கமலா (கீதா கைலாசம்), மகன் கலை (கவின்) மற்றும் மகள் செல்வியோடு (நிவேதா) வாழ்ந்து வருகிறார். சிறுவயது முதலே ‘ஹீரோ’ ஆக வேண்டும் என்ற கனவோடு தந்தையால் வளர்க்கப்படும் கலை, தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரைத்துறைக்குள் கால்வைக்க முயல்கிறார். திரையுலகத்தின் உண்மை முகமும் அவர் காணும் கனவும் வெவ்வேறாக இருக்க, அவற்றை மீறி தன் கனவிற்காக ஓடும் கலையை, அடுத்தடுத்த நிகழ்வுகள் தோற்கடித்துக் கொண்டே இருக்கின்றன. இறுதியில் கலையின் கனவு என்னவானது என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் இளன்.

ஸ்டார் படத்தில்…

கனவுகளோடு தன் இளமையைக் கொண்டாடும் இளைஞனாக முதல் பாதியிலும், தோல்விகளின் நெருக்கடிகளுக்கு இடையே தன் கனவைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் கணவனாக இரண்டாம் பாதியிலும் தன் தேர்ந்த நடிப்பை வழங்கி, கலை என்ற மனிதனின் வாழ்க்கைப் பயணத்திற்கு உயிரூட்டியிருக்கிறார் கவின். முக்கியமாக, இறுதிக்காட்சி கவினின் நடிப்பிற்கு நல்ல தீனி. ஏக்கம், பாசம், கோவம், வைராக்கியம், தோல்வி என அழுத்தமாக நகரும் பாண்டியன் கதாபாத்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது லாலின் முதிர்ச்சியான நடிப்பு.

தன் கதாபாத்திரத்தின் ஏற்ற இறக்கத்தை அறிந்து அதற்கேற்ற கச்சிதமான நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரித்தி முகுந்தன். அதீதி போஹன்கரின் மிகை நடிப்பு சில இடங்களில் தொந்தரவாக மாறிப் போகிறது. தேவையான நடிப்பை கீதா கைலாசம் வழங்கியிருந்தாலும், சில இடங்களில் தந்திருக்கும் ஓவர் டோஸான ரியாக்‌ஷன்களைக் குறைத்திருக்கலாம். மாறன், காதல் சுகுமார், ராஜா ராணி பாண்டியன், தீப்ஸ், நிவேதிதா ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

படம் பழகிய டெம்ப்ளேட்டில் நேர்கோட்டில் நகர்ந்தாலும், ஒவ்வொரு காட்சிகளிலும் சின்ன சின்ன சுவாரஸ்யங்களைச் சேர்த்து ‘ஃப்ரெஷான’ ஒன்றாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர். குரலில் மட்டும் வந்து போகும் அப்பத்தா கதாபாத்திரம், ஹெல்மெட் சண்டை, யுவன் சங்கர் ராஜாவின் பழைய பாடல் ஒன்று பொருத்தப்பட்ட இடம், இறந்த வீட்டில் நடக்கும் சேட்டைகள் எனச் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லாமல் பயணிக்கிறது முதற்பாதி. நடிகர்களின் பங்களிப்பால் அடுத்தடுத்து வரும் எமோஷனலான காட்சிகளும் ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. குறிப்பாக லேடி கெட்டப் என்பதைத் துறுத்தலாக வைக்காமல் அதற்கென மெனக்கெட்டு காட்சிகள் எழுதிக் கைதட்டல் பெறுகிறார் இயக்குநர்.

மொட்டை மாடியில் நின்றுகொண்டு, கவின் வசனத்தை ஒப்பிவித்துக்காட்டும் இடம் `நச்’. இவ்வகையிலான எமோஷனல் காட்சிகளே முதற்பாதிக்கு உயிரூட்டியிருக்கின்றன. அதேநேரம், அடுக்கடுக்காக வரிசை கட்டும் பெரிய எமோஷனல் காட்சிகளுக்குச் சிறிது நிதானத்தைச் சேர்க்கத் தவறியதால், அதன் தாக்கம் சற்றே குறைந்து போகிறது. அதோடு, கவினுக்கு நடிப்பின் மேல் பெரும் ஆசை வந்ததற்கான காரணம் போதுமான அளவு அழுத்தமாகச் சொல்லப்படாததும் நெருடல்.

ஸ்டார் படத்தில்…

இப்படி சராசரிக்கும் சற்றே அதிகமாக ஸ்கோர் செய்யும் முதல் பாதியைக் கடந்தால் இரண்டாம் பாதி தொடக்கத்திலிருந்தே வெவ்வேறு திசைகளில் பயணிக்கிறது. வீழ்ச்சி கண்ட கதாநாயகனின் அகத்தில் இருக்கும் குழப்ப ரேகை, இயக்குநரின் எழுத்திற்கும் பரவியிருப்பதாகவே தெரிகிறது. தன்னுடைய பிரச்னை என்னவென்பதை உணராமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் கதாநாயகனின் நிலையையும், அதற்கான தீர்வையும் நோக்கி நகராமல், காதல், காதலியின் கதை, கல்யாணம், மோதல் எனத் தலையைச் சுற்றிச் சுற்றி, சீரியல் ரகக் காட்சிகளால் ஏமாற்றமளிக்கிறார் இயக்குநர். இதனால் உணர்வுபூர்வமான தருணங்கள் டல்லடிக்கவே செய்கின்றன.

இந்தத் தொகுப்பை மொத்தமாகத் தோற்கவிடாமல், கவினின் நடிப்பும், சில எமோஷனலான காட்சிகளும் மட்டுமே காப்பாற்றுகின்றன. படம் முழுவதுமே வசனங்கள் உயிர்ப்புள்ள ஒன்றாக மனதில் நிற்கின்றன. சிங்கிள் டேக்கில் எடுக்கப்பட்ட இறுதிக்காட்சி எழுதப்பட்ட விதம், கவினின் நடிப்பு, அதைப் படத்தின் முதல் காட்சியோடு இணைத்த விதமும் போன்றவை தியேட்டர் கொண்டாட்டத்துக்கான தீனி! அதுவரை இருந்த திரைமொழி மாறியிருப்பதும் சுவாரஸ்யமானதொரு யுக்தி!

அழகியலோடும் ஆழமாகவும் உருவாக்கப்பட்ட பிரேம்களாலும், கதைக்கு ஏற்ற டோனைக் கடத்தும் ஒளியமைப்பாலும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எழில் அரசு.கே. முக்கியமாக, இறுதி காட்சியில் வரும் சிங்கிள் டேக்கில் அவரின் அசாத்திய உழைப்பு வெளிப்படுகிறது. பிரதீப் இ.ராகவ்வின் ‘கட்’கள், திரைமொழிக்குக் கைகொடுத்திருக்கிறது என்றாலும், முதற்பாதியில் கொஞ்சம் நிதானத்தையும் இரண்டாம் பாதியில் கொஞ்சம் வேகத்தையும் காட்டியிருக்கலாம்.

`ஸ்டார்’ படத்தில்…

யுவன் சங்கர் ராஜாவின் இசையில், கபிலன் வரிகளில் ‘இரு விழி’ பாடலும், மதன் கார்க்கி வரிகளில் ‘காலேஜ் சூப்பர்ஸ்டார்’ பாடலும் ரசிக்க வைக்கின்றன. யுவன் சங்கர் ராஜாவின் பழைய பாடல் ஒன்று ஸ்வீட் சர்ப்ரைஸாக வருவது பெரும்பலம். படம் முழுவதும் நிறைந்திருக்கும் எமோஷன்களுக்குப் பக்கபலமாக இருந்து ஒரு ஸ்டாராக ஜொலிக்கிறது அவரின் பின்னணி இசை. வினோத் ராஜ் குமாரின் கலை இயக்கமும், சுஜித் சுதாகரனின் ஆடை வடிவமைப்பும் கவனிக்க வைக்கின்றன.

ஒரு நடிகனின் வெற்றிக்குப் பின்னான ஏற்ற இறக்கங்களைப் பேசு முயன்றிருக்கும் `ஸ்டார்’, முதற்பாதியில் உணர்வுபூர்வமான தருணங்களால் ஜொலித்தாலும், வழி தவறும் இரண்டாம் பாதியால் டல்லடித்து, ஒட்டுமொத்தமாக ஒரு மங்கலான பிரகாசத்தையே தருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.