இன்னும் இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தை குறைக்கலாம். – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டின் தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க, பிள்ளைகளுக்கு நமது பாரம்பரியத்தைப் பற்றி கற்றுக்கொடுங்கள். – பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின் மூலம் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், பௌத்த அமைப்புகள் மற்றும் வர்த்தகர்களை ஒருங்கிணைத்து வெசாக் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கு வெசாக் வலயங்களை ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதுபற்றிய கலந்துரையாடல் தொடரில் கொலன்னாவை கலந்துரையாடல் (2024.05.17) பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கொலன்னாவை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். அதுபற்றி அரசாங்கத்துக்குள் நாங்கள் பேசிவருகிறோம். இந்த மின்கட்டணக் குறைப்பை அடுத்த இரண்டு மாதங்களில் நடைமுறைக்கு கொண்டு வரமுடியும். உமா ஓயா மின் உற்பத்தி நிலையம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும். இப்போது இலங்கையின் மின்சார கட்டமைப்புக்கு உமா ஓயாவிலிருந்து நூற்றி இருபது மெகாவாட் மின்சாரம் கிடைக்கப்பெறுகிறது.

நமது சமூகம் பல பெரிய சவால்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. பொருளாதார ரீதியில் நாம் எதிர்கொண்ட மிகக் கடினமான காலகட்டத்தை முழுமையான வெற்றியாக மாற்றுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். பல்வேறு சமூக சவால்களால் எமது மக்களின் வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் உள்ளன. அந்த நிலையைத் தடுப்பதற்கு மகாசங்கத்தினரின் வழிகாட்டல் மற்றும் செயற்திறமான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். பழங்காலத்திலிருந்தே பாதுகாக்கப்பட்ட மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் வளர்ந்து வரும் தலைமுறைக்கு வழங்கப்பட வேண்டும். அதனை வெற்றியடையச் செய்வதற்கு ஒரு அரசாங்கம் என்ற வகையில் பல்வேறு திணைக்களங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்.

மக்களின் நம்பிக்கையை வெற்றிகரமான நிலைக்கு கொண்டு வரக்கூடிய அபிவிருத்தியாக பிரதேசத்தின் அபிவிருத்தியை மாற்றும் பணியை மேற்கொள்ளுங்கள். இதற்கு அரசாங்கத் திணைக்களங்களின் உடனடித் தலையீட்டினை நாம் எதிர்பார்க்கிறோம். பிரதான வீதிகளில் உள்ள பிரச்னைகள், தடைகளை முடித்து, மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திணைக்களங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை இதன்போது வலியுறுத்த விரும்புகிறேன்.

வெசாக் பண்டிகை தொடர்பில் மாவட்ட செயலாளர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆளுநர்கள் கூறும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப செயற்படுங்கள். எந்தப் பகுதியிலும் பௌத்தக் கொடியை ஏற்றுவதில் குறைபாடு இருக்க முடியாது. இதை அரச அதிகாரிகள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர –

பந்தல்களை அமைத்தல், வெசாக் கூடுகளை செய்தல், கொண்டாட்ட முறைகள் நமது பாரம்பரியம். பௌத்த கலாசாரத்தின் அம்சங்கள். இந்தப் பாரம்பரியங்களைப் பற்றி பாடசாலை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். கலாசாரம் என்பது ஒரு நாட்டின் அடையாளம். இனத்தையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும்.

எமது வெசாக் வலயத்தில் தொண்ணூறு வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த வெசாக் வலயத்தை திட்டமிடுவதற்கு பௌத்த மதத்தை சேர்ந்த எமது நாட்டின் இரண்டாவது பிரஜை என்ற வகையில் பிரதமர் இங்கு வருகை தந்ததை நாம் பாராட்டுகின்றோம். பிரதமர் அமைதியானவர். பௌத்த கலாசாரத்தைப் பேணுவதற்கு பௌத்தப் பணிகளுக்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குபவர். கொலன்னாவ மக்களுக்கு நீங்கள் நீரைப் பெற்றுக் கொடுத்தீர்கள். மதத்தையும் சாசனத்தையும் பாதுகாப்பது சிங்கள மக்களின் கடமை. அந்த கலாசாரம் மற்றும் அடையாளத்தின் படியே, வெசாக் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

சங்கைக்குரிய மடுகல்லே தம்மசிறி தேரர், சங்கைக்குரிய வேகும்புரே பஞ்ஞானந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி விஜேசிறி, கொலன்னாவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.