மெக்சிகோவில் பிரச்சார மேடை சரிந்து 9 பேர் உயிரிழப்பு, 50+ காயம்

மெக்சிகோ: மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மெக்சிகோவில் வரும் ஜூன் 2-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது.

அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மேனெஸின் (Jorge Alvarez Maynez) பிரச்சார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது. குடிமக்கள் இயக்கம் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

அந்நிகழ்வின்போது, பலத்த காற்று வீசியதில் மேடை சரிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேடை சரிந்ததில் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மிகவும் சோகமான செய்தி என்று நியூவோ லியோன் மாநிலத்தின் கவர்னர் சாமுவேல் கார்சியா தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் தனது எக்ஸ் தளத்தில், “நான் நன்றாக இருக்கிறேன், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதே முன்னுரிமை” என்று குறிப்பிட்டுள்ளார். யூவோ லியோன் மற்றும் பிற வட மாநிலங்களில் சூறாவளி வீசக்கூடும் என்று மெக்சிகோவின் வானிலை சேவை முன்னதாக எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதோடு புயல் காரணமாக மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு கவர்னர் கார்சியா அழைப்பு விடுத்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.