58 மக்களவை தொகுதிகளுக்கான 6-ம் கட்ட தேர்தலில் 59% வாக்குப்பதிவு

புதுடெல்லி: ஆறாம் கட்டமாக 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இதன்படி 428 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இதைத் தொடர்ந்து 6-ம் கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 58 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

இதன்படி, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்குவங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் ஒரு தொகுதியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த தொகுதிகளில் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலோடு 42 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது.

முதல்வர் மம்தா புகார்: மேற்குவங்கத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகள் தொடர்பாக தேர்தல் ஆணை யத்திடம் சுமார் 954-க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டன. பெரும் பாலான புகார்களில், வாக்குச் சாவடிக்குள் முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

பங்குரா பகுதி வாக்குச்சாவடிகளில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் பாஜக முகவர்களின் சீல்கள் மட்டுமே இருந்தன. அந்த புகைப்படங்களை முதல்வர் மம்தா பானர்ஜி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக விளக்கம் அளித்தது. “குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் காலையில் நடைபெற்ற மாதிரி வாக்குப் பதிவின்போது பாஜக முகவர்கள் மட்டுமே இருந்தனர். இதன் காரணமாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக முகவர்களின் சீல்கள் மட்டுமே இடம்பெற்றன” என்று தேர்தல் ஆணையம் விளக்க மளித்தது.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பாஜகவினருக்கும் சமாஜ் வாதி கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம், மோதல்கள் ஏற்பட்டன.

காஷ்மீரின் அனந்தநாக்-ராஜோரி தொகுதியில் காஷ்மீர் முன்னாள் முதல் வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாடு கட்சி வேட்பாளர் மியான் அட்லப் அகமது இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் பிடிபி கட்சி தலைவர்கள், தொண்டர்களை போலீஸார் பிடித்து வைத்திருப்பதாகவும் குற்றம்சாட்டி மெகபூபா முப்தி நேற்று அனந்தநாக்கில் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். எனினும் அனந்தநாக்-ராஜோரி தொகுதி மக்கள் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினர்.

ஹரியாணா, பிஹார், டெல்லி, ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 6-ம் கட்ட தேர்தலில் 58.82 சதவீத வாக்குகள் பதிவாகின. மிகஅதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 78.19%, குறைந்தபட்சமாக ஜம்மு-காஷ்மீரில் 51.41% வாக்குகள் பதிவாகின.

டெல்லி ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திர வித்யாலயா அரங்கம் பிங்க் மற்றும் வெள்ளை வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்டு மகளிர் மட்டும் வாக்களிக்கும் வாக்குச்சாவடியாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இங்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு காலை 9 மணிக்கு வாக்கு செலுத்தினார். பிறகு தேர்தல் மை தீட்டப்பட்ட தனது இடதுகை ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டி, “நான் ஒரு பெருமைமிகு வாக்காளர்” என்றார்.

டெல்லி நார்த் அவென்யூவில் உள்ள சிபிடிபிள்யூடி சர்வீஸ் சென்டரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வரிசையில் நின்று காத்திருந்து குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வாக்களித்தார்.

தனது மனைவி சுனிதா, தந்தையுடன் இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்துக்கு எதிராக எனது வாக்கை செலுத்தினேன்” என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் நிர்மன் பவனில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9.30-க்கு வாக்களித்தனர். காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இண்டியா கூட்டணியில் இணைந்து டெல்லியில் பாஜகவை எதிர்கொள்கின்றன.

லோடி தெருவில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது கணவர் ராபர்ட் வத்ரா மற்றும் மகன், மகளுடன் வாக்களித்தார். இதில் பிரியங்காவின் மகள் மிராயா வத்ரா முதன்முறையாக வாக்களித்தார் என்பது குறிப் பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மூத்த தலைவர்கள் பிருந்தா கார்த், பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜா உள்ளிட்ட இடதுசாரி தலைவர்களும் வாக்கு செலுத்தினர்.

ஜூன் 1-ல் இறுதி கட்ட தேர்தல்: இறுதி மற்றும் 7-வது கட்ட மக்களவைத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் உத்தர பிரதேசத்தில் 13, பஞ்சாபில் 13, மேற்குவங்கத்தில் 9, பிஹாரில் 8, ஒடிசாவில் 6, இமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, சண்டிகரில் 1 என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

மேற்குவங்கத்தில் வன்முறை: மேற்குவங்கத்தின் பல்வேறு பகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன.

சார்கிராம் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரணாநாத் போட்டியிடுகிறார். அந்த தொகுதிக்கு உட்பட்ட கட்பெட்டா வாக்குச்சாவடிக்கு அவர் காரில் சென்றார். அப்போது அவரது கார் மீது ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

பிரணாநாத்தை, பாதுகாப்பு படை வீரர்கள் மீட்டு அழைத்துச் சென்றனர். வேட்பாளரும், பாதுகாப்பு படை வீரர்களும் கல்வீச்சு கும்பலிடம் இருந்து தப்பியோடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த தாக்குதலின்போது சிஐஎஸ்எப் படையை சேர்ந்த 2 வீரர்களுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தம்லக் மக்களவைத் தொகுதியில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யா பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் ஹால்டியாவில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றபோது அவர் மீது சிலர் காலணிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

தாதன் பகுதி சப்ரா கிராமத்தில் பாஜகவின் தேர்தல் அலுவலகம் சூறையாடப்பட்டது. தக்சினா காந்தி பகுதியில் பாஜக முகவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.