Cannes: `8 நிமிடங்கள் இடைவிடாத கை தட்டல்!' – சாதனை படைத்த இந்திய படைப்புகள்!

உலகளவில் புகழ்பெற்ற பிரபல திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘கான் திரைப்பட விழா’ கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. 

இந்த விழாவில் சிறந்த திரைப்படத்திற்குக் கொடுக்கப்படும் இரண்டாவது பெரிய விருதான கிராண்ட் பிரிக்ஸ் விருதை ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட் (All We Imagine As Light)’ என்ற இந்தியத் திரைப்படம் வென்று சாதனை படைத்துள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு ‘கான் திரைப்பட விழா’விற்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்தியத் திரைப்படம் இதுவே. மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா என்பவர் இயக்கிய இத்திரைப்படத்தில் மலையாள நடிகைகளான கனி குஸ்ருதி, திவ்ய பிரபா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

All We Imagine As Light

கடந்த 23 ஆம் தேதி ‘கான் திரைப்பட விழா’வில் கிராண்ட் லூமியர் திரையரங்கில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கேரளாவிலிருந்து மும்பைக்குப் புலம்பெயர்ந்து வரும் இரண்டு செவிலியர்களின் கதையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. படத்தைப் பா்த்துவிட்டு அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று 8 நிமிடம் இடைவிடாது கை தட்டி தங்களது பாராட்டை வெளிப்படுத்தினார்கள். 

மும்பை மற்றும் ரத்னகிரியில் 45 நாட்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 திரைப்படங்களுடன் போட்டியிட்ட இத்திரைப்படம், 38 வயது பாயல் கபாடியாவின் முதல் திரைப்படம் ஆகும். இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘எ நைட் ஆஃப் நோயிங் நத்திங்’ என்ற ஆவணப்படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஐ ( Golden Eye ) விருதும் கிடைத்தது.

அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தின் இயக்குநர் பாயல் கபாடியா, 2015ம் ஆண்டு இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) நடிகரும், அரசியல்வாதியுமான கஜேந்திர சவுகாரை தலைவராக நியமித்ததை எதிர்த்து 139 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது மட்டுமின்றி 77வது கான் திரைப்பட விழாவில் இந்திய திரைப்படங்களுக்கு மேலும் சில விருதுகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த ‘அனசுயா செங்குப்தா’ வென்று சாதனை படைத்துள்ளார். இவ்விருதை பெரும் முதல் இந்தியர் இவரே. பல்கேரியன் இயக்குநர் கான்ஸ்டான்டின் போஜனோவ் இயக்கிய ‘The Shameless’ என்ற திரைப்படத்திற்காக இந்த விருது இவருக்குக் கிடைத்துள்ளது.

The Shameless

இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற ‘கான் திரைப்பட விழா’வில் உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ‘பியர் ஆன்ஜினோ’ விருது இந்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டது. பல ஆண்டுகளாக சினிமாவிற்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ‘பியர் ஆன்ஜினோ’ விருதை பெரும் முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் என்ற பெருமையையும் இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ‘கான் திரைப்பட விழா’வில் விருதுகளை வென்று சாதனை படைத்த இந்தியர்களுக்கு பல்வேறு துறையில் உள்ள பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.