KKR: `தொட்டுப்பார் கைகள் நடுங்கும்..!' – கொல்கத்தாவின் வெற்றிக்குக் காரணமான 4 விஷயங்கள்

சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றிருக்கிறது கொல்கத்தா அணி. இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பாக ஆடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருந்தது. மற்ற அணிகளை விட சீராக பெர்பார்ம் செய்தே கொல்கத்தா அணி சாதித்திருந்தது. கொல்கத்தா அணி சாம்பியன் ஆக காரணமாக இருந்த சில அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

KKR v SRH

கவுதம் கம்பீர்:

கொல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாரூக்கான் கவுதம் கம்பீருக்கு ப்ளாங்க் செக்கை கொடுத்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளுங்கள். அடுத்த 10 வருடங்கள் எங்கள் அணியோடு இருங்கள் என கூறியிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அது உண்மையோ என்னவோ தெரியவில்லை. உண்மையில் அப்படி நடந்திருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனெனில், கம்பீர் ஒரு ஆலோசகராக அணிக்கு அந்தளவுக்கு வலு சேர்த்திருக்கிறார். ‘கம்பீர் எங்கள் அணியில் இருப்பது வீரர்கள் புது தெம்பை கொடுத்திருக்கிறது.

ஷாருக் கான், கவுதம் கம்பீர்

இரண்டு ஐ.பி.எல் கோப்பைகளை வென்றவரின் அனுபவத்தை வேறெதையும் கொண்டு நிரப்ப முடியாது.’ என கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழுவை சேர்ந்த அபிஷேக் நாயர் ஒரு முறை கூறியிருந்தார். அது உண்மைதான். கம்பீர் வந்த பிறகுதான் நரைன் மீண்டும் ஓப்பனராக்கப்பட்டார். அவர் மேலும் கீழும் அலைக்கழிக்கப்படாமல் ஓப்பனிங்கில் உறுதியாக வைக்கப்பட்டார். அதற்கான பலனையும் அவர் கொடுத்தார். அவரின் சிறப்பான சீசன்களில் இதுவும் ஒன்று. ஸ்டார்க் மாதிரியான ஒரு வீரர் தொடர்ந்து சொதப்பும்போதும் அவருக்கு அணியில் இடத்தை உறுதி செய்து கொடுத்ததில் கம்பீரின் பங்கு பெரிதாக இருந்தது. அணிக்கே ஒரு விடாப்பிடி மனநிலையை கொடுத்தார். எதுவாக இருந்தாலும் மோதி பார்த்துவிடலாம் என்கிற போர்க்குணத்தை உண்டாக்கினார். கம்பீர் அணிக்குள் வந்ததால் ரசிகர்களும் கொல்கத்தாவின் மீது கூடுதலாக இறுக்கமாகினர். ஒட்டுமொத்தத்தில் கோப்பையை வென்றதில் பவுண்டரிக்கு வெளியே இருந்த கம்பீரின் பங்கு பெரிதாக இருந்தது.

ஸ்டார்க் ட்விஸ்ட்:

ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கி வந்தது. அப்போதே பார்மில் இல்லாத அவருக்கு எதற்கு இத்தனை கோடிகள் என கடும் விமர்சனங்கள் எழுந்தது. அதற்கேற்ப ஸ்டார்க்கும் கொடூரமாக சொதப்பினார். மேட்ச்சுக்கு மேட்ச் 50 ரன்களுக்கு மேல் கொடுத்தார். முதல் இரண்டு போட்டிகளில் விக்கெட்டே இல்லை. லீக் சுற்றில் 12 விக்கெட்டுகளை மட்டும்தான் எடுத்திருந்தார். அச்சுறுத்தும் வகையிலான பௌலிங் அவரிடமிருந்து வரவே இல்லை. ஆனால், ப்ளே ஆப்ஸில் வேறொரு ஸ்டார்க் வெளியே வந்தார். அவருடைய உச்சக்கட்ட பார்மில் எப்படி இருப்பாரோ அப்படி இருந்தார்.

Starc

முதல் தகுதிச்சுற்றில் இதே சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக பவர்ப்ளேயிலேயே 3 விக்கெட்டுகள். ஹெட், அபிஷேக், ஷபாஷ் என அந்த 3 விக்கெட்டுகளுமே முக்கியமான விக்கெட்டுகள். மேட்ச் வின்னிங் ஸ்பெல் அது. மேன் ஆப் தி மேட்ச் விருதும் அவருக்குதான். இறுதிப்போட்டியிலும் முதல் ஓவரிலேயே சன்ரைசர்ஸூக்கு அதிர்ச்சி கொடுத்தார். அபிஷேக்கை ஸ்டம்புகள் சிதற வெளியேற்றினார். அதே பவர்ப்ளேயில் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக ஆடும் ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்திக் கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்திலேயே தடுமாற முக்கிய காரணமாக இருந்தார். ‘Delivers When it Matters’ என்பார்கள். அதை மிகச்சரியாக ஸ்டார்க் செய்திருந்தார்.

ஸ்பின் டுவின்ஸ்:

கொல்கத்தா அணி என்றவுடன் எதிரணிகளுக்கு உதறலை கொடுக்கும் முதல் விஷயம் சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி கூட்டணிதான். இருவரும் வீசும் 8 ஓவர்கள்தான் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்டத்தை அப்படியே கொல்கத்தா பக்கமாக மாற்றியிருக்கிறது. பெரும்பாலான போட்டிகளில் இவர்களின் 8 ஓவர்களை பார்த்து ஆடிவிட்டு மற்ற ஓவர்களை பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான் எதிரணிகளின் திட்டமாக இருக்கும். வருண் சக்கரவத்தி தமிழக வீரர். கொல்கத்தா அணிக்கு தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த 4 சீசன்களில் மூன்று சீசன்களில் வருண் சக்கரவர்த்திதான் கொல்கத்தா அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த சீசனிலும் ஏமாற்றவில்லை.

Varun Chakravarthy | வருண் சக்கரவர்த்தி

அவர்தான் கொல்கத்தா அணியின் சிறந்த பௌலர். இந்த சீசனில் மட்டும் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். நரைனும் 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டு ஸ்பின்னர்கள் இணைந்து ஒரு சீசனையே கொல்கத்தா பக்கமாக மாற்றியிருக்கின்றனர்.

ஓப்பனிங் கூட்டணி:

சாம்பியனாகும் அணிகளை எப்போது பார்த்தாலும் அவர்களின் ஓப்பனிங் கூட்டணி மிகச்சிறப்பாக ஆடியிருக்கும். அப்படி ஆடும் அணிகள்தான் சாம்பியன் ஆகியிருக்கும். சன்ரைசர்ஸ் அணி இவ்வளவு தூரம் வந்ததற்கும் இங்கே வந்து தோற்றதற்குமே அவர்களின் ஓப்பனிங் கூட்டணிதான் காரணம். இந்த விஷயத்தில் கொல்கத்தா அணி கில்லியாக இருந்தது. சுனில் நரைனை சால்ட்டோடு ஓப்பனிங் இறக்கி வித்தை காட்டினார்கள். நரைன் முன்பு அச்சமே இல்லாமல் அதிரடியாக ஆடுவாரே அதேமாதிரி இந்த சீசனில் ஆடினார்.

Sunil Narine

500 ரன்களுக்கு நெருக்கமாக 180 க்கு நெருக்கமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியிருந்தார். சால்ட்டும் விடவில்லை. அவர் இன்னொரு பக்கம் 435 ரன்களை 182 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருந்தார். சால்ட் ப்ளே ஆப்ஸில் இல்லையென்றாலும் கொல்கத்தா முதல் அணியாக ப்ளே ஆப்ஸ் வந்ததற்கு அவர் பெரிய காரணம். பவர்ப்ளேக்குள்ளாகவே இருவரும் பல போட்டிகளையும் தங்கள் பக்கமாக மாற்றிவிட்டனர்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு இவைதான் முக்கிய காரணங்கள். இவை இல்லாமல் நீங்கள் நினைக்கும் காரணங்களை கமெண்ட் செய்யுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.