தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் சேதத்துக்கு கேட்டது ரூ6,230 கோடி; கொடுத்தது ரூ816 கோடி: மக்களவையில் ஒன்றிய அரசு ஒப்புதல்

சென்னை: தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ள சேதத்துக்கு தமிழகம் கேட்டது ரூ.6,230 கோடி. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்தது ரூ.816 கோடி. இதனை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார். ‘தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள், பயிர் சேதங்கள், மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகள் ஆகியவற்றை ஈடுகட்டுவதற்காக ஒன்றிய அரசிடம் 6 ஆயிரத்து 230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டு முறையீடு செய்திருக்கிறதா? அப்படி முறையிட்டிருந்தால் அதன் பேரில் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? வெள்ளச் சேதத்தை மத்திய குழுவினர் கடந்த நவம்பர் கடைசி வாரம் பார்வையிட்டு சென்ற நிலையில், அதன் அடுத்தகட்டமாக ஒன்றிய அரசு நிதி உதவியை விரைவில் அளிக்குமா?’ என்று கடந்த 8ம் தேதி மக்களவையில் திமுக எம்பி.க்கள் ஆ.ராசா, பாரிவேந்தர், ராமலிங்கம், கனிமொழி ஆகியோர் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்டிருந்தனர். இந்த கேள்விகளுக்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது: பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளில் முதன்மையான பொறுப்பு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே உள்ளது. இயற்கை சீற்றங்களின் போது மாநில அரசுகள் ஏற்கனவே இருப்பு வைக்கப்பட்டுள்ள மாநில பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். சாதாரணமான இயற்கை சீற்றங்கள் என்றால், உடனடி நிதி உதவிகளும், கடுமையான இயற்கை சீற்றம் என்றால் மத்தியக் குழு பார்வையிட்டு அதன் அடிப்படையிலான கூடுதல் நிதி உதவிகள் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து விதிமுறைகளின்படி வழங்கப்படும். 2021 அக்டோபர், நவம்பர் மாதங்களில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கடுமையான மழை பொழிவு வெள்ளச் சேதம் பற்றி மதிப்பீடு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு நவம்பர் 21 முதல் 24ம் தேதி வரை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது. முதலில் தமிழக அரசு வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்வதற்காக ரூ.2629.29 கோடி நிவாரணத் தொகையாக கேட்டது. அதில், 549.63 கோடி ரூபாயை உடனடி நிவாரணமாகவும், மீதமுள்ள 2079.66 கோடி ரூபாயை நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் கேட்டது. மத்திய குழுவின் தமிழக வருகையின் போது மாநில அரசு 2வது முறையாக ஒரு முறையீட்டு மனுவை அளித்தது. அதில் ரூ.4,625 கோடியை கேட்டது. ரூ.1,070 கோடியை தற்காலிக நிவாரணப் பணிகளுக்காகவும், ரூ3,554 கோடியை நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்காகவும் தமிழக அரசு கோரியது. இந்நிலையில், 21-12-2021ம் தேதி தமிழக அரசு 3வது முறையீட்டு மனுவை அளித்தது. அதில், திருத்தி அமைக்கப்பட்ட நிதி உதவியாக ரூ.6,230.45 கோடியை நிவாரண உதவியாக வழங்க வலியுறுத்தியது. இதில், ரூ. 1,510.83 கோடி உடனடி நிவாரணத்துக்காகவும், ரூ.4,719.62 கோடி நிரந்தர மறுசீரமைப்புக்காவும் கேட்டது. இதற்கிடையே, மத்திய குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. விதிமுறைகளுக்கு உட்பட்டு தமிழ்நாட்டுக்கான கூடுதல் நிதி உதவிகள் பற்றி பரிசீலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.1,088 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில்,  ரூ.816 கோடி மத்திய அரசின் பங்காகவும், ரூ.272 கோடி மாநில அரசின் பங்காகவும் இருக்கும். மத்திய அரசின் பங்கான ரூ.816 கோடி, தலா ரூ.408 கோடி என 2 தவணைகளாக விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.