திருவண்ணாமலையில் 4 நகராட்சிகளிலும் திமுக, அதிமுகவுக்கு கடும் நெருக்கடி:  ‘முடிவை’ தீர்மானிப்பது யார் யார்?

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளிலும் திமுக மற்றும் அதிமுகவுக்கு பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் கடும் நெருக்கடியை கொடுக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திருவண்ணாமலை, ஆரணி, திருவத்திபுரம் (செய்யாறு) மற்றும் வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளிலும் திமுகஅதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்யாதது வேட்பாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

அதேநேரத்தில் திமுக தரப்பில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் கம்பன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்பேத்குமார், ஜோதி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், அதிமுக தரப்பில் தெற்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வடக்கு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் தூசி மோகன் ஆகியோர் பிரசாரம் செய்கின்றனர். இரு தரப்பும் அசுர ‘ப’லத்துடன் களத்தில் சுழன்றாலும் பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் சூறாவளி பிரச்சாரத்தால் ’ஆட்டம்’ கண்டுள்ளது.

திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களுக்கு ‘உதயசூரியன், இரட்டை இலை சின்னம்’ என்ற மிகப்பெரிய அஸ்திரம் இருந்தாலும், உள்ளூர்காரர் என்ற முத்திரையுடன் போட்டியிடும் வேட்பாளர்கள் (பிற கட்சிகள் மற்றும் சுயேட்சை) பெறும் வாக்குகள், ‘வெற்றி – தோல்வி’யை தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களது பிரச்சாரத்துக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. அதையும் மீறி, அவர்கள் பிரச்சார பயணத்தை தொடர்கின்றனர். உள்ளூர் பிரச்சினைகளை பட்டியலிட்டு, அதனை தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவே பிரதான கட்சியான திமுக – அதிமுகவுக்கு அழுத்தத்தை கொடுத்துள்ளது. மேலும் உட்கட்சி பூசலும், அவர்களுக்கு தலைவலியை அதிகரிக்க செய்துள்ளது.

திமுகவில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளுக்கு சொற்ப இடங்களை மட்டுமே ஒதுக்கியதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அவர்களும் ஆர்வம் காட்டவில்லை. தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால் அவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயம் திமுக வேட்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாமக தனித்து களம் காண்பதால், அவர்களது வாக்குகளை ஈடு செய்வதில் அதிமுகவுக்கு கடும் சவாலாக உள்ளது. தமிழகத்தில் தாமரை மலரும் எனும் முழக்கத்துடன் தனித்து களம் காணும் பாஜக, பண பலத்துடன் உள்ள வேட்பாளர்களை களம் இறக்கி உள்ளதால், ஒரு சில வார்டுகளில் நெருக்கடி நிலவுகிறது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள், தலைமை வகுத்துள்ள கொள்கையை எடுத்துரைத்து தன்னம்பிக்கையுடன் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் நான்கு நகராட்சிகளிலும் குடிநீர், சாலை வசதி, குப்பைகள் அகற்றம், கழிவுநீர் கால்வாய் மற்றும் குப்பை கிடங்கில் குப்பை குவியல், புதிய ரேஷன் கடை, அங்கன்வாடி மையம், பேருந்து சேவை ஆகிய பிரதான கோரிக்கைளுடன் மக்கள் காத்திருக்கின்றனர். அவர்கள், தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தருபவர் யார்? என முடிவு செய்கிறார்களோ, அவர்களுக்கே வெற்றி வாகை சூட்டப்படும். அவர்கள் யார்? என்று பிப்ரவரி 22-ம் தேதி வரை காத்திருப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.