உக்ரைனில் அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கும்: ஜோ பைடன் எச்சரிக்கை

வாஷிங்டன்: உக்ரைனில் அடுத்த மாதம் ரஷ்யா படையெடுக்கும் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனின் எல்லையில் ரஷ்யா நிறுத்தியதால் ரஷ்யாஉக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவியது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையாக விமர்சித்தன. ஆனால், இதனை ரஷ்யா மறுத்து வருகிறது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் எமிலி ஹார்ன் பேசும்போது, “பிப்ரவரி மாதம் உக்ரைனில் ரஷ்யா படை எடுக்கும் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்” என்று கூறினார்.

மேலும், வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், “உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமித்தால், அதன் நட்பு நாடுகள் மற்றும் அண்டை நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா உறுதியான பதிலடி கொடுக்க தயாராக இருப்பதை அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தி இருக்கிறார் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் பதற்றம் ஏன்?

சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்று உக்ரைன். மொழி,கலாச்சார அடையாளத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப்போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால், அந்த நாட்டு மக்களோ தங்களை ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் அடையாளப்படுத்த விரும்புகின்றனர்.

பொருளாதாரத்தில் வளரும் நாடு உக்ரைன். மனித ஆற்றல் வளர்ச்சியில் உலகத்தில் 74-வது இடத்தில் இருக்கிறது. வறுமையும் ஊழலும் அதிகம். வளமான விவசாய நிலம் இருப்பதால் வேளாண் பொருள் ஏற்றுமதியில் முக்கியமான நாடாகத் திகழ்கிறது. ராணுவ பலத்தில் ரஷ்யா, பிரான்சுக்கு அடுத்து வருகிறது. குடியரசு நாடு, அதிபர் தலைமையிலான ஒற்றை ஆட்சி முறை நிலவுகிறது. நீதித்துறை, அரசு நிர்வாகத் துறை, சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று முக்கிய உறுப்புகளைக் கொண்டிருக்கிறது. அதிபராக விளாடிமிர் ஜெலன்ஸ்கி. பிரதமராக டெனிஸ் ஷைமிஹால் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் ‘நேட்டோ’ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருந்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.