பஞ்சாப் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக மடங்கள்: டேராக்களின் தலைவர்களுடன் அமித் ஷா, சன்னி சந்திப்பு

புதுடெல்லி: பிப்ரவரி 20 இல் ஒரே கட்டமாக பஞ்சாலின் 117 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கானப் பிரச்சாரம் தீவிரம் பெற்றுள்ள நிலையில், அதில் போட்டியிடும் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் டேராக்களுக்கும் சென்று வருவது துவங்கி விட்டது.

வட மாநிலங்களில் ’டேராக்கள்’ எனப்படும் ஆன்மீக மடங்கள் கொண்டது பஞ்சாப். சிறிதும், பெரிதுமாகப் பல எண்ணிக்கையில் உள்ள இந்த டேராக்களின் பக்தர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர்.

இவர்களில் சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களும், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களும் இடம்பெற்றுள்ளனர். எனவே, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் தேர்தல்களில், இந்த மடங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றில், ஜலந்தரை தலைமையகமாகக் கொண்ட டேரா சச்கண்ட் பாலான், ஹரியாணாவின் சிர்ஸாவிலிருந்து செயல்படும் டேரா சச்சா சவுதா மற்றும் தலித் சமூகத்திற்கான ராதா சுவாமி பியாஸ் ஆகியவை முக்கியமானவை.

மதங்களின் பெயரில் வாக்குகள் கோரக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினால் அவர்களின் சந்திப்பு ரகசியமாக நடந்து வந்தது, ஆனால், இந்தமுறை தேர்தலில் டேராக்களின் தலைவர்களிடம் ஆசி பெறுவது எனும் பெயரில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சந்தித்து ஆதரவு கோருவது அதிகரித்துள்ளது.

இப்பட்டியலில் வழக்கமாக 2017 வரை கூட்டணியாகப் போட்டியிட்டு வந்த பாஜக-அகாலிதளம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் ஆம் ஆத்மியும் டேராக்களின் ஆதரவு வாக்குகளை பெறத் தயங்கவில்லை

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸின் முதல்வரான சரண்ஜித் சன்னி, டேரா சச்கண்ட் பாலன் டேராவின் தலைவரான சந்த் நிரஞ்சன் தாஸை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இதற்கும் முன்பாக டேரா சச்சா சவுதாவின் குருமீத் ராம் ரஹீமின் நெருக்கமான முன்னாள் எம்எல்ஏ நண்பரையும் முதல்வர் சன்னி சந்தித்துள்ளார்.

ஹர்மீந்தர்சிங் ஜாஸி எனும் இந்த நண்பர், பஞ்சாபின் தல்வந்தி சபோ தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். இங்கு பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் சன்னி, ஜாஸியுடன் காரில் தனியாக சுமார் அரை மணி நேரம் சந்திப்பு நடத்தியதாகத் தெரிந்துள்ளது.

நேற்று பஞ்சாபில் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருந்தார். அப்போது அமித்தும், முக்கிய டேராக்களின் ஒன்றான ராதா சுவாமி சத்சங்கின் தலைவரான பாபா குரீந்திர் சிங் தில்லானிடம் ஆசி பெற நேரில் சந்தித்துள்ளார்.

இந்த தகவலை அமைச்சர் அமித் ஷா, தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டுள்ளார். இந்த பாபா குரீந்தர் ஏற்கனவே ஒருநாள் முன்னதாக செவ்வாய்கிழமையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துள்ளார்.

இதுபோன்ற சந்திப்புகளின் போது எந்த அரசியல் தலைவர்களும் ஊடகங்கள் மற்றும் நாளேடுகளின் பத்திரிகையாளர்களை நெருங்க விடுவதில்லை. ஏனெனில், இந்த சந்திப்புகளின் மூலம் அவர்கள் டேராக்களின் பக்தர்களுக்கு உத்தரவிடுமாறும் கோருவது ரகசியமாக இருப்பது காரணம்.

சந்த் நிரஞ்சன் தாஸ்

கடந்த 2017 தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக, ராதா சுவாமி சத்சங் டேராவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்று ஒருநாள் தங்கி வந்தார். இவருடன் காங்கிரஸின் அப்போதைய முதல் அமைச்சர் வேட்பாளரான கேப்டன்.அம்ரீந்தர்சிங்கும் உடன் தங்கி இருந்தார்.

இதனால், 2017 தேர்தலில் காங்கிரஸ் வென்று பஞ்சாபில் ஆட்சி அமைத்திருந்தது. எனவே, டேராக்களில் தலீத்துகளுக்கான ராதா சுவாமி சத்சங் பிரிவு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இதனால், தலித் சமூக ஆதரவு பெற்ற கட்சியான பகுஜன் சமாஜின் தலைவை மாயாவதியும் ராதா சுவாமி டேராவின் ஆதரவை எதிர்பார்க்கிறார். எனினும், பஞ்சாபின் டேராக்களில் ‘டேரா சச்சா சவுதா மடம் தான் மிகவும் பெரியது.

இதன் தலைவரான குருமித் ராம் ரஹீம், ராஜஸ்தானில் பிறந்தவர். ஹரியானாவின் சிர்சாவில் தன் மடத்தை அமைத்துள்ளார். குருமித்திற்கு ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகிய இருமாநிலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவர் நாயகனாக நடித்து மூன்று பஞ்சாபி மொழி படங்களும் வெளியாகி இருந்தன.

குருமித் ராம் ரஹீம்

கடந்த 2017 பஞ்சாப் தேர்தலுக்கு ஆகஸ்டில் டேரா சச்சா சவுதாவின் தலைவர் குருமித் மீதான கிரிமினல் வழக்குகளினல் சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு வெளியானது. ஹரியாணாவின் பஞ்ச்குலாவில் வெளியான தீர்ப்பை அடுத்து குரிமித்தின் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலவரத்தில் இறங்கினர்.

இதில் ஐந்து உயிர்களும் பலியாகின. தீர்ப்பினால் சிறையில் தள்ளப்பட்ட குரிமீத் ராம் ரஹீமிற்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளது. இவரையும் பஞ்சாபில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ரகசியமாக சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

பஞ்சாபின் டேராக்களில் குருமித் ராம் ரஹீம் மட்டும் தனது பக்தர்களிடம் அரசியல் ஆதரவு யாருக்கு என்பதை வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டுள்ளார். மற்ற டேராக்கள் இப்பிரச்சனையில் அதிகம் தலைவிடுவதில்லை.

எனினும், இந்த டேராக்களின் ரகசியத் தகவல்களால் குறிப்பிட அரசியல் கட்சிகள் பயனடைவது அனைத்து தேர்தல்களிலும் தொடர்கிறது. இதுபோன்ற காரணங்களால் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் ஆட்சியாளர்கள் இந்த டேராக்களிடம் எக்காரணம் கொண்டும் நேரடியாக மோதிக் கொள்வதில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.