பெருவெடிப்பை நோக்கிச் செல்கின்றனவா ஊடகங்கள்?!

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான உலகத்தை ஆட்டிப் படைக்கவிருப்பது நம்பிக்கையின்மை என்ற ஒற்றை வார்த்தைதான். வியாபாரம், சமூக உறவு, அரசு செயல்பாடு, ஊடகங்கள் என்று உலக இயக்கத்திற்கான ஒவ்வொன்றின் மீதும் நம்பிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இக்காலம் இருந்துவருகிறது. இதுவரையிலான போக்கை முற்றிலும் மாற்றக்கூடியதாகவும், புதிய வரவுகளைப் பெருமளவில் சார்ந்திருக்கக்கூடியதாகவும் உள்ளது. இது தொடர்பான அறிகுறிகளை முன்கூட்டியே உணர்த்துகின்றன ராய்ட்டர்ஸ், ஈடில்மேன் போன்ற ஊடக நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு அறிக்கைகள். அவற்றில், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் ஊடகங்களின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்துவருவதாகச் சுட்டியிருப்பது, என்ன நோக்கத்திற்காக ஊடகங்களை மக்களை அணுகுகிறார்கள் என்பதையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த மாதம் வெளியான ஈடில்மேன் ட்ரஸ்ட் பாரோமீட்டர் 2022இன்படி என்ஜிஓக்கள், வணிகம், அரசு, ஊடகங்கள் மீதான நம்பிக்கை சதவிகிதம் இந்தியாவில் 74 ஆக உள்ளது. ஆனால், 2021இல் எடுக்கப்பட்ட இதே கணக்கீட்டின்போது அந்த அளவு 77 சதவீதமாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் முத்திரை பதித்த நிறுவனங்களின் மீதான நம்பிக்கை 1% சரிந்து, 36ஆக மாறியுள்ளது. அது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக உலக அளவில் அரசு மற்றும் ஊடகங்கள் மீதான மக்களின் நம்பிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மேலும் சரிந்துள்ளதாகச் சொல்கிறது ஈடில்மேன் அறிக்கை. கடந்த ஆண்டு இறுதியில் மேற்கொள்ளப்பட்ட இக்கணிப்பின் முடிவுகள், ஜனவரி மாத இறுதியில் வெளியானது.

நம்பிக்கையின்மை பெருகுகிறதா?

ஈடில்மேன் பாரோமீட்டர் சர்வே 2001முதல் 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. ஆன்லைனில் நடத்தப்படும் இந்த சர்வேயில் இந்த ஆண்டு 28 நாடுகளில் உள்ள படித்த, நகர்ப்புற, இணையப் பயன்பாட்டில் ஈடுபாடுள்ள நபர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தியாவில் 1,150 பேரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் குறிப்பிட்ட கேள்விகளுக்கான புள்ளியியல் விவரங்களை வெளியிட்டுள்ளது ஈடில்மேன் நிறுவனம். இந்தி, ஆங்கிலம் என்று இரு மொழிகளைப் பயன்படுத்தினாலும், பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்திலேயே பதிலளித்திருக்கின்றனர் என்று சொல்வதிலிருந்தே கிராமப்புறங்களையோ, நகர்ப்புறத்தை விட்டு விலகிய வாழ்க்கைச் சூழலில் இருக்கும் மக்களையோ இந்த சர்வே அதிகம் உள்ளடக்கவில்லை என்பது விளங்கும்.

சுமார் 36,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இக்கணிப்பின் முடிவுகளில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியிருப்பது கோவிட்-19க்குப் பிறகான
புதிய இயல்பு வாழ்க்கை
குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பொருளாதாரம் குறித்த நேர்மறை எண்ணம் இந்தியா, இந்தோனேஷியா போன்ற பெரும் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் அதிகமிருந்தாலும் ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இதன் அளவு வெகு குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஊடகங்களின் மீதான நம்பிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டை விட 3% சரிந்து, இந்தியாவில் இந்த அளவு 66% ஆக உள்ளது.

சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் பிரபலங்களின் மீதான நம்பிக்கையைப் பொறுத்தவரை விஞ்ஞானிகள், உடன் பணியாற்றுவோர், தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் முன்னிலையில் இருந்தாலும் அரசுத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சிஇஓக்கள் 50%க்கும் குறைவான இடங்களையே பெற்றிருப்பது எந்த புள்ளியில் மக்கள் நிற்கின்றனர் என்ற கேள்வியை எழுப்புகிறது.

சமூகத்தைப் பிளவுபடுத்துவதில் அரசும் ஊடகங்களும் கொண்டிருக்கும் பங்கானது முறையே 48%, 46% என்றிருக்கிறது ஈடில்மேன். கடந்த ஆண்டை விட இவ்விரண்டுமே 12, 11 புள்ளிகள் அதிகரித்திருப்பதை கோவிட்-19 பெருந்தொற்றின் எதிர்விளைவாகவே கருத வேண்டியிருக்கிறது. ஜனநாயகரீதியில் செயல்படும் நாடுகளில்தான் இம்முடிவு கிடைத்திருக்கிறது. இவ்விரண்டின் மீதான நம்பிக்கை சரிந்திருப்பதும் சரி, போலிச் செய்திகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது குறித்த கவலை பெருகியிருப்பதும் சரி, தகவல்களை அறிந்துகொள்வதில் மக்கள் காட்டும் ஆர்வத்தையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

சமூக வலைதளங்களின் செங்குத்து வளர்ச்சி!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூகுளும் ஃபேஸ்புக்கும் பெருமளவு வளர்ச்சியை எதிர்கொண்டுள்ளன. அதேநேரத்தில் அச்சு, தொலைக்காட்சி ஊடக நிறுவனங்கள் விளம்பர வருவாயைப் பெருமளவில் இழந்து, அரசு விளம்பரங்களின் அளவு சரிந்து பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன. இதனால், அவற்றில் பணியாற்றுவோரின் எதிர்காலமே பெருமளவில் இருண்டுள்ளது. ஆனாலும் செய்தித் தகவல்களின் மீதான நம்பிக்கையைப் பொறுத்தவரை சமூகவலைதளங்களின் நிலையைக் கேள்விக்குட்படுத்தியது கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் செய்தி அறிக்கை 2021.

இவ்வறிக்கைக்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவு 82% பேர் ஆன்லைன் பயன்பாட்டை விரும்புவதையும், 63% பேர் செய்திகளுக்கு சமூக வலைதளங்களைச் சார்ந்திருப்பதையும் வெளிக்காட்டியது. தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களைச் சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை முறையே 59%, 50% என்றளவிலேயே உள்ளது. செய்திகளுக்காக 73% பேர் ஸ்மார்ட்போன்களையும், 37% பேர் கம்ப்யூட்டரையும் நாடுகின்றனர் என்றும், 48% பேர் சமூக வலைதளங்கள் மூலமாகச் செய்திகளைப் பகிர்வதும், சமூக வலைதளங்களைப் பொறுத்தவரை வாட்ஸ்அப், யூடியூப், ஃபேஸ்புக் ஆகியன அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் தெரியவந்தது.

அதே நேரத்தில், ஒட்டுமொத்தமாகச் செய்திகளின் மீதான நம்பிக்கையின் அளவு 38% என்ற அளவில் இருப்பதாகச் சொல்லியது இவ்வறிக்கை. இந்த புள்ளிவிவர அட்டவணையில் பின்லாந்து 65% உடன் முதலிடத்தையும், அமெரிக்கா 29% உடன் கடைசி இடத்தையும் பிடித்திருக்கின்றன. இந்தியா, இந்தோனேஷியா, தென்கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான செயலிகளான டெய்லி ஹண்ட், ஸ்மார்ட் நியூஸ், நேவர், லைன் டுடே ஆகியன செய்திகளைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகிப்பது ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவில் உறுதி செய்யப்பட்டது.

இந்தியா முழுக்க சுமார் 392 சேனல்கள் இருந்தாலும், மக்கள் தூர்தர்ஷன் மீதும், அகில இந்திய வானொலி மீதும் மட்டுமே அதிக நம்பிக்கை வைத்திருப்பது தெரியவந்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி, இந்தியா டுடே, பிபிசி, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட அச்சுலக பாரம்பரிய பிராண்ட்களின் மீதான நம்பிக்கை அதிக அளவில் இருப்பதைக் காட்டியது.

பரபரப்புச் செய்திகளை வெளியிட்டு டிஆர்பிகளையும் தர வரிசைகளையும் நிறைக்கும் குறிப்பிட்ட ஊடகங்களுக்குப் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகமிருந்தாலும், அவற்றின் உள்ளடக்கம் மீது நம்பிக்கையில்லை என்று பதிலளித்தவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்தது. தகவல் அறிதலைத் தாண்டி மக்கள் பொழுதுபோக்காகச் செய்திகளை அணுகுகிறார்களோ என்று இது எண்ண வைத்திருக்கிறது.

பிரேக் நியூஸ் யுகத்தில்..!

அரை மணிநேரத்திற்கொரு பிரேக் நியூஸ் வெளியிட்டாகும் கட்டாயத்தைத் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கிவிட்டன சர்வதேச ஊடகங்கள். அத்திசையில் செயல்படும் இந்திய ஊடகங்களும் செய்திகளைச் சேகரிக்கும் நிலையிலிருந்து, விவாதங்கள் உள்ளிட்ட இதர வழிகளின் மூலமாக அவற்றை உருவாக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றன. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களுக்கான பாரம்பரியப் பார்வையாளர்களைவிட, சமூக வலைதளங்கள் வழியே அணுகும் இணையப் பார்வையாளர்களையே இந்நிறுவனங்களும் குறி வைக்கின்றன. மொபைலில் இணையப் பயன்பாட்டைத் தொடங்கினாலே, இதன் விளைவைக் காண முடியும். கோவிட்-19 பெருந்தொற்றின்போது வீட்டிலிருந்தே பணியாற்றியதும், ஊரடங்கினால் அடைந்து கிடந்ததும் ஓடிடி தளங்களுக்குப் புதிய பாய்ச்சலையே தந்திருக்கின்றன. கடந்த இரண்டாண்டுகளாக கிட்டத்தட்ட செங்குத்து வளர்ச்சியையே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெற்றுவருகின்றன.

இது மேலும் மேலும் உச்சம் பெறுவதென்பது ஒரு பெருவெடிப்பை நோக்கி ஊடகங்கள் செல்கின்றனவோ என்ற சந்தேகத்தை எழச் செய்கிறது. தித்தித்திப்பு திகட்டும் என்பதைப் புரிந்தாகத் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. சமூக வலைதளங்களைப் பலர் கண்டுணர்ந்தாலும், அவற்றின் உள்ளடக்கத்தைப் பெரிதாக நம்புவதில்லை என்பது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம்தான். ஆனாலும், ஒட்டுமொத்தமாக ஊடகங்கள் மீதான நம்பிக்கை சரிந்திருப்பதும் போலிச்செய்திகள் குறித்த கவலை பெருகியிருப்பதும் நம்பகத்தன்மைக்காக எதனைச் சார்ந்திருப்பது என்ற கேள்வியை எழுப்புகிறது.

மேற்கண்ட கணிப்புகள் அனைத்துமே இணையம் வழி சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் சுமார் 54% பேர் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்திவரும் நிலையில், மிகச்சில ஆயிரம் பேரிடம் எடுக்கப்பட்ட கணிப்பின்படி வெளியாகியிருக்கும் இம்முடிவுகள் எந்த அளவுக்குப் பெரும்பான்மை சமூகத்தைப் பிரதிபலிக்கும் என்பது கேள்விக்குறியே. என்றாலும் இந்த முடிவுகளைத் தற்போதைய போக்குகளைச் சுட்டிக்காட்டும் அடையாளங்களாகக் கொள்வதில் தவறு இருக்க முடியாது. எனவே, நம்பகத்தன்மையை அதிகப்படுத்த வேண்டிய இக்கட்டான சூழலுக்கு இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆளாகியிருப்பதையும் மறுக்க முடியாது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.