தமிழகத்தின் 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதா? – தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

கடின உழைப்பால் தமிழக நகர்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜக மூன்றாம் இடத்திற்கு வந்துள்ளதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில், மொத்தமுள்ள 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, ஒரே கட்டமாக, கடந்த சனிக்கிழமை (19-ம் தேதி) தேர்தல் நடந்தது. 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு, 57,778 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவானது. 
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்த, அதே கூட்டணியோடு தேர்தலை எதிர்கொண்டது திமுக. நயினார் நாகேந்திரன் ஏற்படுத்திய சர்ச்சையால், அதிமுக தனித்து போட்டியிட முடிவு செய்தது. இதனால் பாஜக-வும் தனித்துப் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. தமிழகத்தில் பாஜக-வுக்கு எந்த அளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை அறியவும், தமிழக பாஜக இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கியது.
image
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பரபரப்பாக தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், இந்தத் தேர்தலில் ஒரு வார்டு கவுன்சிலர் கூட பாஜக பெறாது என்று கூறப்பட்ட நிலையில், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் கண்ட பாஜக, 21 மாநகராட்சியில் 22 வார்டுகளை கைப்பற்றி உள்ளது.
தொடர்ந்து, நகராட்சியில் 56 வார்டுகளிலும், பேரூராட்சியில் 230 வார்டுகளிலும் பாஜக வெற்றிப்பெற்றுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில், ஒரே ஒரு இடத்தில் மட்டும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் சில இடத்தில் திமுக மற்றும் அதிமுகவை காலி செய்துள்ளது பாஜக. நகர்புற உள்ளாட்சி முடிவுகளின் படி திமுக, அதிமுக முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
image
கட்சி வாரியாக மாநகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 68.27% சதவீதம், அதிமுக – 11.94 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 5.24%, பாஜக – 1.60 சதவீதம், சிபிஐ (எம்) – 1.75%, சிபிஐ – 0.95%.
கட்சி வாரியாக நகராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக – 61.41 சதவீதம், அதிமுக – 16.60 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 3.93%, பாஜக – 1.46 சதவீதம், சிபிஐ (எம்) – 1.07%, சிபிஐ – 0.49% மற்றும் தேமுதிக – 0.31%.
கட்சி வாரியாக பேரூராட்சி வார்டுகளின் வெற்றி விகிதம்: திமுக 57.58 சதவீதமும், அதிமுக 15.82 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் – 4.83%, பாஜக – 3.02 சதவீதமும் ஆக உள்ளன. சிபிஐ (எம்) – 1.33%, சிபிஐ – 0.34% மற்றும் தேமுதிக – 0.30% ஆக உள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை தவிர்த்து பார்க்கையில், திமுக கூட்டணி முதல் இடத்திலும், அதிமுக 2-வது இடத்திலும், பாஜக 3-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
image
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது, “இன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றி. பாஜகவை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். இதுவரை வெல்லாத இடங்களிலும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மூலை முடுக்கெல்லாம் தாமரையை மலரச் செய்கிறோம். இந்த வெற்றியானது பிரதமர் மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதன் பலன் கிடைத்து விட்டது. கடின உழைப்பால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளோம். மக்கள் நலனுக்காக அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் பாஜக உறுதுணையாக இருக்கும். பாஜகவின் வலிமையை உணர்த்துவதற்காகவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். பாஜக வலிமையடைந்து வருகிறது. அதிமுகவுடனான தேசிய கூட்டணி தொடரும். ஒரு தேர்தலில் அதிமுக பின்தங்கிவிட்டதால் அதனை குறைத்து மதிப்பிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.