"`சகோதரி சிந்துஜா'னு உதயநிதி ட்வீட் போட்டிருந்தார். அண்ணனா கடைசி வரைக்கும் இருந்தார்!"- அருண்ராஜா

“‘கனா’ ரிலீஸுக்குப் பிறகு அடுத்த படத்திற்காக ஸ்க்ரிப்ட் வொர்க் போயிட்டு இருந்தது. அப்போ, போனிகபூர் ஆபிஸ்ல இருந்து போன் வந்தது. ஒரு மீட்டிங் வெச்சாங்க. அப்போ, ‘ரீமேக் பண்ண ஐடியா இருக்கானு’ கேட்டாங்க. அப்போ ‘ஆர்ட்டிக்கிள் 15’ ரீமேக் பண்ண முடியுமானு பேச்சு வந்தது. இந்தில இந்தப் படம் பார்த்துட்டு நிறைய பேசியிருக்கேன். நிறைய வைப் கிரியேட் பண்ணுன படம். பிலிம் மேக்கிங் மற்றும் சோசியல் சார்ந்த விஷயங்களைப் பேசுனதுலயும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ எல்லோருக்கும் பிடிச்ச படம். இந்த மாதிரியான கதை நம்மகிட்ட கிடைக்கிறப்போ இதை விட்டுற கூடாதுனு தோணுச்சு.

இதுக்குப் பிறகு, முழு ஸ்கிரிப்ட் புக் கொண்டு போயிட்டு உதய் சார்கிட்ட கொடுத்தேன். முழுசா படிச்சு பார்த்துட்டு, ‘சரி’னு சொன்னார். எல்லாம் சரியா அமைஞ்சதுக்குப் பிறகு படம் ஷூட் பண்ண ஆரம்பிச்சோம். இப்போ நிறைய எமோஷனல் பாண்டிங்கோட படம் முடிஞ்சிருக்கு. இந்தப் படம் என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத படம். இதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. படத்தோட பிராசசிங் நேரத்துல இருந்தே நிறைய நடந்திருக்கு. நம்ம எதையெல்லாம் இழந்தோம், எதெல்லாம் கிடைச்சிருக்குனு நிறைய இருக்கு. இழப்புகள் எல்லாம் நியாயமாகவும், எதுக்கு இவ்வளவு மெனக்கெடுறோம்ங்குறதும் மக்களுக்கு நல்ல முறையில் போய் சேரணும்” என்று பேசத் தொடங்கிறார் ‘கனா’ படத்தைத் தொடர்ந்து ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை முடித்திருக்கும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.

இயக்குநர் அருண்ராஜா காமராஜ்

“முதல்ல, நடந்தது எல்லாத்தையும் ஏத்துக்கத்ததே பெரிய சவாலான விஷயம். இதுக்கு அப்புறம், நிறைய எமோஷனல் டிராமா. இதெல்லாம் தாண்டி வர்றது பெருசு. பெரிய இயக்குநரா என்னை பார்க்க மனைவி ஆசைப்பட்டாங்க. எங்க கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே சிந்துவை தெரியும். எங்களுக்குள்ள நிறைய கனவுகள் இருந்தது. எங்க கனவுலாம் சேர்ந்து ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துல இருந்தது. எங்க வாழ்க்கையில அடுத்தவொரு ஸ்டெப்பா ‘நெஞ்சுக்கு நீதி’ இருக்கும்னு நம்பிக்கையோட இருந்தோம். எப்போவும் அவங்க ஆசிர்வாதம் இருக்கும். எங்களுடைய கனவு ஜெயிக்கும்.”

பொள்ளாச்சி சார்ந்து ஸ்க்ரிப்ட் இருக்கட்டும்னு முடிவு பண்ணிட்டுதான் ஷூட்டிங் போனீங்களா?

“பொள்ளாச்சில சுதந்திரபாலம் எனும் ஊர்ல நடக்குற கதையா எடுத்திருக்கோம். ஆனா, நிஜத்துல சுதந்திரபாலம் எனும் ஊரே இல்ல. இது ஒரு கற்பனை ஊர். ஏன்னா, இது ஒரு மாடல் வில்லேஜ். இந்தில உத்தரப் பிரதேசம்ல எடுத்திருப்பாங்க. பனி கலந்த ஊரா இருக்கும். இதே மாதிரி பனி எங்கே இருக்கும்னு யோசிச்சு பொள்ளாச்சியை செல்க்ட் பண்ணினோம். விஷூவலா நிறைய காட்டலாம்னும் முடிவு பண்ணி அங்க ஷூட்டிங் போனோம்.”

நெஞ்சுக்கு நீதி

உதயநிதி படத்துல எந்தளவுக்கு பொருந்தி போனார்?

“நான் சொல்றதை விடவும், ஆடியன்ஸ் என்ன சொல்ல போறாங்கனு வெயிட் பண்றோம். எங்களுடைய உழைப்பை நூறு சதவிகிதம் போட்டிருக்கோம். ஒரு விஷயத்தை உள்வாங்கிட்டு நடிக்கிறதுக்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் உதயநிதி. எத்தனை நாள் கழிச்சு ஷூட்டிங் போனாலும் அதே எமோஷனல் உணர்வுக்குள்ள திரும்ப வந்து நடிக்குறதுனு ரொம்பவே நல்லா பண்ணியிருக்கார்.

தினமும் எடுக்கப் போற சீன்ஸ் காப்பி அவர்கிட்ட இருக்கும். இதுக்கு நல்ல தயார் ஆகிட்டுதான் வருவார். எந்த டவுட் இருந்தாலும் கேட்டு க்ளியர் பண்ணிருவார். தன்னம்பிக்கையா ஒரு விஷயத்தை சொன்னா ஒத்துக்குவார். அரசு சார்ந்த பணியில் உதய் சார் இருக்குறனால சில விஷயங்கள் பற்றி நுணுக்கமா தெரிஞ்சிக்கிட்டு எங்களுக்குச் சொல்லுவார். இந்தப் படத்துக்காக நிறைய பேரை மீட் பண்ணி பேசுனோம். இந்தில உத்திரபிரதேசம் சார்ந்து இருக்குற விஷயத்தைத் தமிழுக்கு எப்படிக் கொண்டு வர்றதுனு பெருசா பேசுனோம். கிட்டதட்ட நிறைய டைரக்டர்ஸ், ரைட்டர்ஸ் எல்லாரும் ஸ்க்ரிப்ட் பண்றப்போ ஹெல்ப் பண்ணுனாங்க. இந்த புரொஜக்ட் பண்ண போறோம்னு கேள்விப்பட்டு சமூக அக்கறையோட நிறைய விஷயங்களைச் சொன்னாங்க. இதை எல்லாத்தையும் படத்துல சேர்த்து இருக்கோம். நிறைய ரிப்போர்ட்டர்ஸ் ஸ்க்ரிப்ட் படிச்சுட்டு அவங்களுக்குத் தோணுன விஷயங்களையும் சொன்னாங்க. எல்லாருடைய இன்புட்ஸும் சேர்த்து வொர்க் பண்ணியிருக்கோம்.”

போலீஸ் கேரக்டருக்கு ஏத்த மிடுக்கை உதயநிதி எப்படிக் கொண்டு வந்தார்?

அருண்ராஜா காமராஜ்

“முதல்ல எலெக்ஷன் போயிட்டு வந்துட்டு வெயிட் லாஸ் ஆகிருச்சுனு உதய் சார் பீல் பண்ணுனார். இதுவரைக்கும் சினிமால சிக்ஸ் பேக் இருக்குற மாதிரியான போலீஸ் ஆபிசர்ஸ்தான் பார்த்திருக்கோம். இந்த சிக்ஸ் பேக் மாதிரியான விஷயங்களெல்லாம் இல்லாம எதார்த்த வாழ்க்கையில நம்ம பார்க்குற ஐ.பி.எஸ் ஆபிசர்ஸ் எப்படி இருப்பார்னு நினைச்சுதான் ஸ்க்ரிட்ப் வொர்க் பண்ணியிருந்தேன். பெருசா ஜிம் வொர்க் அவுட் பண்ணாம பிட்டா இருக்குற போலீஸ் ஆபிசரா வருவார். நான் நிஜ வாழ்க்கையில் பார்த்த போலீஸ் ஆபிசர்ஸ் நார்மல் பிட்டா இருப்பாங்க. முதல்ல, உதய் சார்க்கு போலீஸ் ஆபிசர் டிரெஸ் போட்டு பார்த்தோம். ‘நம்ம லுக்னால படத்துக்கு ஆபத்து வந்துட கூடாது. யாரும் படத்தை குறை சொல்லிற கூடாது’னு நினைக்குற ஒருத்தர் உதய் சார். ‘எனக்கு நம்பிக்கை இருக்கு சார்’னு அவர்கிட்ட சொன்னேன். போட்டோஷூட் பண்ணிப் பார்த்துட்டு, ‘உங்களுக்கு ஓகேனா எனக்கும் ஓகேனு’ சொன்னார். கொஞ்சம் அலைச்சல், டயர்ட் இதெல்லாம் கதைக்கும் தேவைப்பட்டது. எதிர்பார்த்த போலீஸ் ஆபிஸர் மாதிரியே உதய் வந்து நின்னார்.”

உங்க வாழ்க்கையோட முக்கியமான கட்டத்துல உதயநிதி கூட இருந்தது பற்றி?

நெஞ்சுக்கு நீதி

“இந்தப் படம் மூலமாகத்தான் உதயநிதி பழக்கம். ‘என்னுடைய சகோதரி சிந்துஜா’னு ட்வீட் போட்டிருந்தார். நாங்க ஹாஸ்பிட்டல்ல இருந்தப்போ அண்ணனா இருந்து உதவினார். அண்ணன்னா கடைசி வரைக்கும் இருந்தார்.

என்னோட மனைவிக்கும், எனக்கும் ஹெல்த் பிரச்னை இருந்ததால கொரோனா காலத்துல வெளியே வராம வீட்டிலயே இருந்தோம். அப்போ, ‘நான் உங்களை மீட் பண்ணலாம்னு சொன்னாலும் வர மாட்டீங்க போலனு’ ஜாலியா சொல்லுவார். எங்க சூழ்நிலையை எப்போவும் புரிஞ்சிக்கிட்டார். பெருசா பேச மாட்டோம். ஆனா, நல்ல புரிதல் எப்போவும் இருக்கும். பேர் சொல்லியெல்லாம் கூப்பிடுங்க. ‘சார்’ வேண்டாம்னு சொல்லுவார். மனைவிக்கு முதல்ல பாசிட்டிவ்ன்னு ரிசல்ட் வந்தப்போவும் ‘எதுவா இருந்தாலும் சொல்லுங்க. பார்த்துக்கலாம்னு’னார். பெருசா அவரைத் தொந்தரவும் பண்ணதுல்ல. ‘ஹாய் சார்’னு மெசேஜ் பண்ணினாலே போன் பண்ணிடுவார். நான் புரொபஸ்னல் வேலையை எப்போவும் பெர்ஷனல் லைப்ல கொண்டு போக மாட்டேன். ஆனா, உதயநிதி ‘சகோதரி சிந்துஜா’னு ட்வீட் போட்டது சந்தோஷமா இருந்தது. என்னால முடியாம அழுதப்போ அவர்தான் என்னை அரவணைச்சு ஆறுதல் சொன்னார்.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.