மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்..! <!– மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்க… –>

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர்கள் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சிறப்புத் தூதர்களாகச் செல்ல உள்ளனர்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மத்திய அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய அமைச்சர்களைச் சிறப்புத் தூதர்களாக அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, வி.கே.சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டைநாடுகளுக்குச் செல்ல இருக்கின்றனர். 

இதனிடையே உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை ரஷ்யாவின் பெல்கோராடு வழியாக அழைத்து வருவது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தொலைபேசியில் பேசியுள்ளார். ருமேனியா, போலந்து எல்லைகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்பது குறித்தும் அவர்கள் பேசியதாகக் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவாவில் பணிகளை ஒருங்கிணைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சுலோவாக்கியாவுக்கும், பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஹங்கேரிக்கும் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங் போலந்துக்குச் சென்று உக்ரைன் எல்லையில் சிக்கியுள்ள இந்தியர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.