விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தங்க கோபுர கலசங்கள் கொள்ளை

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில் காசிக்கு இணையான கோவில் என கருதப்படுவதால் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் தற்போது புதுப்பொலிவுடன் காட்சியளிப்பதால் நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று இரவு பூஜைகள் முடிந்து கோவில் கதவு சாத்தப்பட்டது.

நள்ளிரவு நேரம் மர்மநபர்கள் சுவர்ஏறி கோவிலுக்குள் குதித்தனர். பின்னர் விருத்தாம்பிகை அம்மன் சன்னதிக்கு சென்ற மர்ம நபர்கள் கோபுரத்தின் உச்சியில் இருந்த 3 தங்க கலசங்களை கொள்ளையடித்து சென்றனர்.

இன்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகிகள் தங்க கோபுர கலசங்கள் திருடுபோனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கோவிலில் கொள்ளையடித்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கண்காணிப்பு கேமரா மூலம் தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.