ஒற்றைத் தலைமை இபிஎஸ் வீசிய குண்டு லைனில் வந்த ஓபிஎஸ்

அதிமுகவில் மீண்டும் சசிகலாவை சேர்க்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலர் குரல் எழுப்பிய நிலையில், அதிமுகவில் இரட்டைத் தலைமையை நீக்கி பொதுக்குழுவை கூட்ட தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று எடப்பாடி பழனிசாமி முகாம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, டி.டி.வி.தினகரன் இருவரையும் மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து இரண்டு நாட்களாக அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் வியாழக்கிழமை தொலைபேசியில் பேச்சு வார்த்தை நடத்தி விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்து, தேனியில் ஓ.பி.எஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட விவகாரம் அதிமுகவில் பெரிய விவாதமாக மாறி சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஓ.பி.எஸ் முகாமுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கும் முயற்சியை முறியடிக்கவும், அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுருத்தியும் எடப்பாடி பழனிசாமி அவசரமாக பொதுக்குழு கூட்டம் கூட்டுவதற்கான செய்தியை ஓ.பி.எஸ்.க்கு அனுப்பியுள்ளார்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி இ.பி.எஸ் குண்டு வீச, ஷாக் ஆன அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் லைனுக்கு வந்துள்ளார். இதுமட்டுமல்லாமல், இ.பி.எஸ் பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனுடன் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் அதிமுகவின் மோசமான செயல்பாடு குறித்து விவாதிக்க ஓ.பி.எஸ் பெரியகுளத்தில் புதன்கிழமை ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில், அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்ட அனைவரையும் திரும்ப கட்சியில் சேர்க்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து இ.பி.எஸ் முகாம், வெள்ளிக்கிழமை அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானங்களை நிறைவேற்றி, அதிமுகவில் இரட்டைத் தலைமையை விலக்கி ஓ.பி.எஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்குச் செக் வைத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையைத் தேர்வுசெய்ய உடனடியாக பொதுக்குழுவைக் கூட்டுமாறு அச்சுறுத்தியது.

இ.பி.எஸ் முகாமிடம் இருந்து இப்படி ஒரு குண்டு வீசப்பட்டதை சற்றும் எதிர்பாராத ஓ.பி.எஸ், லைனில் வந்து இ.பி.எஸ் மற்றும் சில மூத்த தலைவர்களுடனும் தொலைபேசியில் பேசியதையடுத்து இ.பி.எஸ் முகாம் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஓ.பி.எஸ் தேனி கூட்டத்தில் நடந்ததை இ.பி.எஸ்.ஸிடம் விளக்கி சமாதானம் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுக தேனி மாவட்டச் செயலர் சையத் கான், சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று புதன்கிழமை ஆதரவு தெரிவித்தார். ஏனெனில், சசிகலா கட்சியில் இருந்து வெளியேற்றப்படது, இப்பகுதியில் தேர்தல்களில் கட்சியின் மோசமான நிலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர். கட்சி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் எப்போதும் நம்புகிறார். அவர் தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறார்” என்று சையத் கான் கூறினார்.

இதுகுறித்து சையத் கான் ஊடகங்களிடம் கூறுகையில், “தேனி மாவட்ட தீர்மானத்தை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல மூத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்னிடம் பேசி வருகின்றனர். இருப்பினும், ஓ.பி.எஸ் தனது யோசனைக்கு கட்சித் தலைமை முழுவதும் பெரிய ஆதரவைப் பெறவில்லை.” என்று கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமைக் குழு உறுப்பினருமான சி.வி.சண்முகம் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்தவர்களில் முதன்மையானவர். சி.வி.சண்முகம், “அதிமுக வலுவாகவும், சீராகவும் உள்ளது. தொண்டர்கள் மன உறுதியும் அதிகமாக உள்ளது. குழப்பத்தை உருவாக்குவதால் இரட்டைத் தலைமையால் பயனில்லை. எங்களுக்கு ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும்” என்றார். இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் என்று சசிகலா தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் சேர்க்க ஓ.பி.எஸ் முயற்சி செய்ய, அதற்கு இ.பி.எஸ் அதிமுக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி அவசரமாக பொதுக்குழு கூட்டப்படும் என்று குண்டு வீசியிருக்கிறார். இதனால், ஓ.பி.ஸ் லைனில் வந்து சமாதானம் பேசியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.