'இதுல கூடவா அரசியல் செய்வீங்க?' – டென்ஷனான பிரதமர் மோடி!

உக்ரைன் – ரஷ்யா போர் விவகாரத்தில், எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர்
யோகி ஆதித்யநாத்
தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆறு கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல், வரும் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் இன்று, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசியில் உள்ள கஜூரி கிராமத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது:

கடந்த ஆட்சியில் மாபியா கும்பல் அட்டகாசம் செய்தது. இதனை நாங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தோம். உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போது பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவிட் காலத்தில் ஏழை மக்களுக்கு உதவியாக இருந்தோம். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை சிலர் கேலி செய்தனர். இலவச ரேசன் பொருள் வழங்கினோம். ஆயூஸ்மான் யோஜனா திட்டத்தில் மகள் பயனடைந்துள்ளனர். பெண்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்துள்ளோம்.

வீட்டில் கழிப்பறை இல்லாத ஏழைத் தாய் படும் கஷ்டம் அரண்மனைகளில் வசிப்பவர்களுக்குத் தெரியாது. சூரிய உதயத்திற்கு முன்பு அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு தான் இயற்கை உபாதையை கழிக்க வேண்டும். கண்மூடித்தனமான எதிர்ப்பு, தொடர்ச்சியான எதிர்ப்பு, கடுமையான விரக்தி ம்ற்றும் நெகட்டிவிட்டி என்பது எதிர்க்கட்சிகளின் அரசியல் சித்தாந்தமாகிவிட்டது. உக்ரைன், ரஷ்யா விவகாரத்திலும் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்கின்றனர். இதனை நிறுத்தி கொள்ள வேண்டும். இந்தியர்கள் நலனில் எவ்வித சமரசமும் கிடையாது. வரும் தேர்தலிலும் பாஜகவே ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர். மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.