போருக்குப் பின் இருக்கும் `கச்சா எண்ணெய் கணக்குகள்' – உக்ரைன் போரால் யாருக்கு லாபம்?

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டு வருகிறது. ஜனவரி மாதத் தொடக்கத்தில் 80 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை நேற்று அதிகபட்சமாக 139 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. இது மூன்று மாதத்தில் ஏறக்குறைய 65% ஏற்றமாகும். இந்த விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் ரஷ்யா – உக்ரைன் போர்தான்.

Ukraine

கச்சா எண்ணெய்க்காகப் போர்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து போர்களும் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அடிப்படையாகக் கொண்டே நடைபெற்றிருக்கின்றன. தற்போதைய போரும் மறைமுகமாக இதை அடிப்படையாகக் கொண்டே இருக்கிறது.

உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா இருக்கிறது. மேலும், அதிக இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் நாடாக ரஷ்யா இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை சப்ளை செய்வது ரஷ்யாதான்.

உக்ரைன் வழியாக குழாய் மூலம், `நார்டு ஸ்ட்ரீம் 1′ திட்டத்தின்படி ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை சப்ளை செய்கிறது ரஷ்யா. தற்போது கடல் வழியாக இயற்கை எரிவாயு சப்ளை செய்யும் `நார்டு ஸ்ட்ரீம் 2′ என்ற திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு ரஷ்யா உலகில் அதிக அளவு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் நாடாக விளங்குகிறது.

இந்தச் சூழ்நிலையில் ரஷ்யாவுக்கு செக் வைக்கும் விதமாக அமெரிக்காவை தலைமையாகக் கொண்ட நேட்டோ ராணுவ அமைப்பு கிழக்கு ஐரோப்பா நாடுகளை ஒவ்வொன்றாக தமது குழுவில் இணைக்கத் தொடங்கியது. இதில் ஒரு பகுதியாக ரஷ்யாவில் இருந்து பிரிந்த ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய நாடான உக்ரைன் நாட்டை தன்னுடன் இணைத்துக்கொள்ள நேட்டோ அமைப்பு முடிவு செய்தது. இதை ரஷ்யா விரும்பவில்லை. ஆனால், உக்ரைனுக்கு அமெரிக்க தொடர்பு பிடித்திருந்தது. அமெரிக்காவும் உக்ரைன் நாட்டில் ரஷ்ய ஆதரவு அதிபரை விலக்கிவிட்டு தனக்கு சாதகமான அதிபரை வெற்றி பெறச் செய்ய உதவியது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்நாள் உக்ரைன் அதிபரை அமெரிக்காவின் கைப்பாவை என்று கூறியதிலிருந்து இதை நாம் உணர முடியும்.

ரஷ்யா உக்ரைன் போர்

நேட்டோ அமைப்பில் சேர கடுமையான எதிர்ப்பு

அதனால்தான் ரஷ்யா ஆரம்பத்திலிருந்து உக்ரைன், நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. ஆனால், அதை நேட்டோ அமைப்பு சட்டை செய்யவில்லை. அதன் தொடர்ச்சியாக ரஷ்யா தற்போது உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நாடு போர் தொடுத்த பிறகு ஜெர்மனி ரஷ்யாவின் `நார்டு ஸ்ட்ரீம் 2′ திட்டத்துக்கு தடை விதித்தது. மேலும், பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பா நாடுகளும் ரஷ்யாவுக்கு விதித்தன.

`நார்டு ஸ்ட்ரீம் 2′ திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையே கச்சா எண்ணெய் விலை உயர்வின் ஆரம்பப்புள்ளி ஆகும். என்றாலும் இதுவரை ரஷ்யா கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கு உலக நாடுகள் தடை எதுவும் விதிக்கவில்லை.

ஆனால், ரஷ்ய நாட்டில் இருந்து வங்கிகள் மூலம் பிற நாடுகளுக்கு பணம் அனுப்பும் ஸ்விஃப்ட் முறைக்கு உலக நாடுகள் தடைவிதித்தன. இதன் காரணமாக பணப் பரிவர்த்தனைகள் செய்வதற்கு சிக்கல்கள் எழுந்தன. மேலும் உக்ரைன், ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று உலக நாடுகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறது. போர் தொடர்ந்து இரண்டாவது வாரத்தை எட்டும் இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடும் என்ற ஊகத்தின் அடிப்படையில் கச்சா எண்ணெய் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்து வருகிறது.

Crude Oil (Representational Image)

தற்போது உலக நாடுகள் ரஷ்ய நாட்டின் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றன. அதனால் ரஷ்யா போருக்கு முந்தைய விலையில் 15% வரை சலுகையில் கச்சா எண்ணெய் விற்பதற்கு பல நாடுகளுக்கு தூண்டில் போட்டு வருகிறது. ரஷ்யா தற்போது சீனாவிடம் நட்பு பாராட்டி வருகிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெயை சீன நாடு வாங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அவ்வாறு நடைபெற்றால் அது சீன நாட்டிற்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமையும். இதன் காரணமாகத்தான் சீன நாட்டின் பங்குச் சந்தை மற்றும் கரன்சி மிகப் பெரிய வீழ்ச்சியை அடையவில்லை.

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ரஷ்ய நாட்டின் பங்கு மிகக் குறைந்த நிலையில் 2% என்ற அளவில் உள்ளது. நமது நாட்டு தேவையில் 80% வரை கச்சா எண்ணெய் வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது ரஷ்யா இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்குவதாகக் கூறியிருக்கிறது.

என்றாலும், இந்தியா கச்சா எண்ணெய்யை ரஷ்யாவிலிருந்து கொள்முதல் செய்வதற்கு தயக்கம் காட்டி வருகிறது. அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் கோபத்துக்கு உட்பட்டு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அது நமது நாட்டுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்திவிடும். அதனால்தான் இந்தியா இதுவரை புதிய ஒப்பந்தங்கள் எதுவும் ரஷ்யாவிடம் ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பிற ஐரோப்பிய நாடுகளிடம் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு தடை விதிப்பது பற்றி ஆலோசித்ததாகச் செய்தி வெளியிட்டிருந்தது. இதன் காரணமாகத் திங்கள் கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 15% கச்சா எண்ணெய் விலை அதிகரித்திருக்கிறது. செவ்வாய்க் கிழமை 130 டாலரிலிருந்து 139 டாலராக அதிகரித்திருக்கிறது.

Putin

கச்சா எண்ணெய்யின் விலை ஏற்றம் தற்போது வரை ஊகத்தின் அடிப்படையிலேயே ஏறி வருகிறது. ரஷ்ய இயற்கை எரிவாயுவை தடை செய்தால் அதைச் சார்ந்து இருக்கும் ஐரோப்பா நாடுகள் பெரிதும் பாதிக்கப்படும். தற்போது வரை ஜெர்மனி ரஷ்யாவின் இயற்கை எரிவாயு ஏற்றுமதிக்கு தடை விதிக்கக் கூடாது என்று உலக நாடுகளைக் கேட்டு வருகிறது. இதை மீறி தடை விதிக்கப்பட்டால் அது பெரும் அளவில் ஐரோப்பா நாடுகளைப் பாதிக்கும். இந்தப் போர் சூழ்நிலைக்கு பிறகு ஐரோப்ப நாடுகளில் இயற்கை எரிவாயு விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இதன் காரணமாக ஐரோப்பிய பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. ரஷ்யா பாதுகாப்பாக கடந்த பத்து நாள்களாக பங்குச் சந்தையைத் தற்காலிகமாக மூடியுள்ளது. ஆனால், ரஷ்யா போர் தொடுத்த முதல் இரண்டு நாள்களில் ரஷ்யப் பங்குச் சந்தை 40% வரை சரிந்து இருந்தது.

நமது நாட்டில் உத்தரப்பிரதேசம் உட்பட மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் இதுவரை கச்சா எண்ணெய் விலை ஏற்றம் நுகர்வோர் தலையில் விதிக்கப்படவில்லை. தற்போது கடைசி கட்ட தேர்தல் முடிந்துள்ளதால் இந்த வார இறுதிக்குள் அதிகமான விலை ஏற்றம் காண்பதற்கு வாய்ப்புள்ளது.
இந்தச் சிக்கலான விலையேற்றம் எத்தனை காலம் தொடரும் என்று தற்போது அறுதியிட்டுக் கூற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ரஷ்ய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படாமல் இருந்தால் கச்சா எண்ணெய் விலை சிறிது காலத்தில் குறைந்துவிடும். இந்தியா ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டால் நமது நாட்டுக்கு மிகப்பெரிய பலனைக் கொண்டு வரும்.

Crude Oil (Representational Image)

தற்போது இந்தியா ரஷ்யாவிடமிருந்து ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் நமது நாட்டால் நேரடியாக உலக நாடுகளில் ஒப்புதல் இல்லாமல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாது. இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு உலக நாடுகள் ஆட்சேபனை தெரிவிக்காமல் இருந்தால் நமக்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்துவிடும்.

எண்ணெய் வளத்தின் மதிப்பு

ரஷ்ய நாட்டுக்கு தமது எண்ணெய் வளத்தின் மதிப்பு நன்கு தெரியும். அதனால்தான் ரஷ்யா தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் புறக்கணித்தால் உலகில் பெரும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுவிடும்.

இதை அமெரிக்காவும் நன்கு உணர்ந்திருக்கிறது. நடக்கும் நிகழ்வுகள் தனக்கு சாதகமாக இல்லை என்பதால்தான் அமெரிக்காவும் பதறுகிறது. 2017-ம் ஆண்டு சீனா மீது அமெரிக்கா வர்த்தகப் போரை ஆரம்பித்தது. ஆனால், உலகின் உற்பத்தி கேந்திரமான சீனாவிடம் அமெரிக்காவின் தந்திரம் பலிக்கவில்லை. எதிரிக்கு எதிரி நண்பன் என்பதுபோல சீனா தற்போது ரஷ்ய ஆதரவு நிலையை எடுத்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. ஐநா சபையில் நடைபெற்ற ரஷ்ய நாட்டுக்கு எதிரான வாக்கெடுப்பில் 30% நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது மூலம் உலக நாடுகள் இரண்டாகப் பிரிவதை நம்மால் உணர முடிகிறது.

Petrol

அதனால்தான் ரஷ்ய அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பா நாடுகளைத் தாண்டி உலகில் பல நாடுகள் உள்ளன என்று குறிப்பிட்டு மறைமுகமாகச் சாடியுள்ளார். தற்போது ரஷ்ய அரசு ஸ்வி̀ஃப்ட் நடை முறைக்கு மாற்றாக சீன வங்கியின் உதவியை நாடியுள்ளது. தற்போது அனைத்து கச்சா தொடர்பான பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலர் மூலமே நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவுக்கு பாதிப்பு

மற்ற நாட்டு கரன்சிகளில் ரஷ்ய ஆதரவு நாடுகள் பரிவர்த்தனை மேற்கொண்டால் அமெரிக்காவின் முதலுக்கே மோசமாக முடிந்துவிடும். அதனால்தான் ரஷ்யாவை மிரட்டி வைக்க பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

மேலும் சென்ற வாரம் சவுதி அரேபியாவில் நடைபெற்ற மாநாட்டில் அரேபிய நாடுகள் அதிக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், அதற்கு ஒபெக் நாடுகள் சம்மதம் தெரிவிக்கவில்லை. இரான் மீது அணு ஆயுத பிரச்னை காரணமாக அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது. தற்போது இந்தப் பிரச்னை காரணமாக இரான் நாட்டின் தடைகளை நீக்குவதற்கு அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. அவ்வாறு அந்தத் தடைகள் நீக்கப்படுமேயானால் இரான் அதிக அளவு எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும். அது கச்சா எண்ணெய் பிரச்னை தீர்வதற்கு உதவிகரமாக இருக்கும். ஆனால், இது உடனடியாக நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. தற்போது அமெரிக்கா தன் கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யை உலக நாடுகளுக்கு வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆனால், அவ்வாறு செய்வதால் விலை ஏற்றத்தைப் பெருமளவு தடுக்க முடியாது.

US Dollar (Representational Image)

நேரடியாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டுக்கான போர் ஆக தற்போதைய நிகழ்வுகள் தோன்றினாலும் இயற்கை எரிவாயு சாம்ராஜ்யத்தை யார் பிடிப்பது என்ற போட்டியே பின்புலத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் ரஷ்ய தற்போது யுத்தம் என்ற புலி வாலை பிடித்துள்ளது. புலி வாலை அவ்வளவு சீக்கிரம் விட முடியாது என்பதே தற்போது உள்ள நிலவரம். இந்தப் போட்டியில் கிடைக்கும் வெற்றி தோல்வியை அடிப்படையாகக் கொண்டே கச்சா எண்ணெய் விலையின் போக்கு வருங்காலத்தில் அமையும். அதுவரை இந்தப் போட்டிக்கான விலை எப்போதும் போல் உலக நாடுகளில் உள்ள சாமானிய மக்களின் தலையில்தான் விழும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.