மதுரை சிறுமி மர்ம மரணம்; காதலன் குடும்பம் கைது! – தொக்கி நிற்கும் கேள்விகள்… நடந்தது என்ன?

”குற்றவாளிகள் கைது செஞ்சுட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா, விவரம் தெரியாத புள்ளைய கூட்டிட்டு போய் என்ன பண்ணானுங்கிற கேள்விக்கு பதில் இல்லை. அவ குடும்பத்தோட ஏழ்மையை பயன்படுத்தி அரசாங்கமும், போலிஸும் கேஸை முடிசுட்டாங்க” என்று ஆதங்கப்படுகிறார்கள் மேலூர் வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

சிறுமி மரணம்

மதுரை மாவட்டத்தில் 17 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி 14-ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா கடத்தி சென்றதாக மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மார்ச் 2-ம் தேதி ஹனிபாவின் அம்மா மதினா பேகம் சிறுமியை கொண்டு வந்து ஒப்படைத்தார்.

உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி மரணமடைய, கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து விஷம் கொடுத்து கொன்று விட்டார்கள் என்ற தகவல் பரவ, அது சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால் மேலூர் வட்டாரத்தில் சமூக பதற்றமாக மாறியது.

அதைத் தொடர்ந்து நாகூர் ஹனிபா, நண்பர்கள் பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், தாயார் மதினா, தந்தை சுல்தான் அலாவுதீன், சித்தப்பா சாகுல் ஹமீது, சகோதரர் ராஜா முகமது உறவினர் ரம்ஜான் பேகம் என 8 பேரை போக்சோ, கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீஸ் தற்போது அதில் கொலை வழக்கையும் சேர்த்துள்ளது.

நாகூர் ஹனிபா

உண்மையான காரணம் தெரியாமல் உடலை வாங்கமாட்டோம் என்று நீதி கேட்டு மேலூர் பகுதியில் சாலை மறியல், மதுரை அரசு மருத்துவமனை அருகே ஆர்பாட்டம் என இறங்கினார்கள் சிறுமியின் உறவினர்கள். பாஜக, இந்து அமைப்புகள், முக்குலத்தோர் அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. மேலூரில் ஸ்ரீதர் வாண்டையார் கலந்துகொண்ட போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதால் மக்கள் கொந்தளித்தனர்.

எனினும் போராட்டங்களுக்கு பின்புதான் கொலை வழக்காக மாற்றி விசாரிப்பதாக காவல்துறை அறிவித்ததாக சொல்கிறார்கள். அரசியல் தலைவர்கள் இது குறித்து கண்டனம் தெரிவிக்காத நிலையில் அமைச்சர் பி.மூர்த்தி, சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்து ஐந்து லட்சம் நிதியை வழங்கி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளித்தார். ஆனாலும் பிரச்னை நீரு பூத்த நெருப்பாக உள்ளது.

ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் சாலை மறியல்

சிறுமியின் உறவினர்களிடம் பேசியபோது, ” கணவர் உடல் நலமில்லாத நிலையில் கஷ்டப்பட்டு ரெண்டு புள்ளைங்கள வளர்த்தாங்க. மகள் பிளஸ் டூ படிச்சிட்டிருந்தா, பையன் பத்தாவது படிக்கிறான். இந்த நிலையில்தான் சுல்தான் மகன் அனீபா இந்த புள்ளை கிட்டே ஆசை வார்த்தை காட்டி பேசியிருக்கான். ஊருக்குள்ள எல்லா சாதி – மதத்து ஆளுகளும் தாயா புள்ளையா பழகுவோம். அந்த பையன் நடவடிக்கை ஒருமாதிரியா இருக்கும். வேலை வெட்டி கிடையாது. எப்படியோ இந்த புள்ளைய மூளையக் கழுவி கூட்டிட்டு போயிட்டான்.

முதல்ல இது எங்களுக்கு தெரியாது. அப்புறம்தான் சந்தேகம் வந்து மேலூர் போலீஸ்ல புகார் செஞ்சோம். ஆனா, போலிஸ் கொடுத்த புகாரைக் கண்டுக்கல. அப்புறம் மறுபடியும் போலீசுல புகார் செஞ்ச பிறகுதான் கேஸ் போட்டு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. கடந்த 2-ம் தேதி பையனோட அம்மா பொண்ணை கொண்டு வந்து விட்டுட்டாங்க. அப்புறம்தான் பொண்ணை ரொம்ப கொடுமை பண்ணியிருக்கான்னு தெரிஞ்சது. உடம்புல பல இடங்கள்ல ஊசி குத்துன காயம் இருந்துச்சு. வயிறு வீங்கி கீழே ரத்தமா இருந்துச்சு. இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துனுச்சு. அதோடதான் இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனோம்.

அங்க பார்க்க மாட்டோம்னு சொன்னதும் மேலூர் கவர்மெண்டு ஆஸ்பத்திரிக்கு போனோம். அங்கேயும் பாக்கல. அதோடதான் மதுரை ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தோம். இங்க வந்தும் பொண்ணு கண்ணு தொறக்கல. அப்புறம்தான் தெரிஞ்சது அந்த பையன் எலி மருந்தை சாப்பிட கொடுத்திருக்கான்னு. நாங்க ஏழைங்க, எங்களால என்ன பண்ண முடியும், கூட்டிட்டு போன இடத்துல என்னவெல்லாம் சித்திரவதை பண்ணானோ, அவன் கூட சேர்ந்து வேற யாரெல்லாம் கொடுமை பண்ணாங்களோ, அதை போலீசு கண்டுபிடிக்கணும்” என்றார்கள்.

இவர்களுக்கு சட்ட உதவி செய்த வழக்கறிஞர் பி.ஸ்டாலினிடம் கேட்டேன். ”காவல்துறையின் மெத்தனம்தான் இவ்வளவு பிரச்னைக்கும் காரணம். பிப்ரவரி 14-ம் தேதி சிறுமி காணாமல் போகிறார். பிப்ரவரி 15-ம் தேதி மேலூர் போலீஸில் சிறுமியின் தாயார் புகார் கொடுகிறார். பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்டங்கள், புதிய கைடு லைன்கள் உள்ள நிலையில் அதையெல்லாம் பாலோ பண்ணாமல் புகாரை வாங்கி வைத்துக்கொண்டு மெத்தனமாக இருந்திருக்கிறார்கள். 21-ம் தேதிதான் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். ஊருக்கு வந்துவிட்ட அச்சிறுமிக்கு என்ன பிரச்சன என்று தெரியவில்லை. வந்ததிலிருந்து மயக்க நிலையிலேயே இருந்திருக்கிறார். மனநிலை சரியில்லாத தந்தை வீட்டிலிருக்க, வசதியில்லாத எந்த விவரமும் தெரியாத தாயும் உறவினர்களும் என்னிடம் வந்து விவரத்தை சொன்னார்கள்.

வழக்கறிஞர் பி.ஸ்டாலின்

சீரியஸ் நிலையில் இருந்த சிறுமியை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நண்பர்களை அழைத்துகொண்டு கலெக்டரிடம் எடுத்து சொல்லி உடனடியாக மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு மாற்றி அரசு செலவில் உயர் சிகிச்சை அளித்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றும்படி வலியுறுத்தினோம். கலெக்டரும் ஒத்துக்கொண்டார். ஆனால், சிறுமியை அங்கிருந்து நகர்த்தினால் உயிருக்கு ஆபத்து அங்கேயே உரிய சிகிச்சையை அளிக்கச் சொல்கிறேன் என்றார். ஆனால், கடைசியில் சிறுமியை காப்பாற்ற முடியவில்ல. புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்காத மேலூர் காவல்துறையின் அலட்சியத்தால்தான் இவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளது. தற்போது அக்யூஸ்டுகளை கைது செய்திருந்தாலும் இந்த வழக்கிலுள்ள சந்தேகங்களையும் தீர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றார்.

மதுரை புறநகர் மாவட்ட பாஜக தலைவர் சுசீந்திரன், ”ஒரு ஏழை சிறுமிக்கு மிகப்பெரிய அநீதி நடந்துள்ளது. இதை எந்த கட்சியும் கேட்கவில்லை. வாக்கரசியலை நம்பாத நாங்கள்தான் தொடர்ந்து போராடி வருகிறோம். அந்த சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் உள்ளது. அதை அப்பெண்ணின் தாயார் தெரிவித்தார். இன்னும் பல சந்தேகங்கள் உள்ளது. நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய சிறுமியின் உறவினர்களை காவல்துறை தாக்கியுள்ளது. தற்போது எங்களது சில கோரிக்கைகளை தீர்ப்பதாக ஒத்துக்கொண்டதால் உடலை வாங்கினோம்.

மக்கள் போராட்டம்

எரிக்க சொன்னார்கள். பின்னால் தேவைப்படும் என்று புதைத்துள்ளோம். போஸ்ட் மாடர்ம் ரிப்போர்ட் வந்ததும் அதன் அடைப்படையில் நீதிமன்றத்தில் முறையிட்டு கடைசி வரையில் போராடுவோம்” என்றார்.

ஊரிலுள்ள இன்னும் சிலர் ”அவர்கள் இருவரும் காதலித்த விஷயம் இரண்டு குடும்பத்துக்கும் தெரியும். ஊர் பெரியவர்கள் ரெண்டு தரப்பையும் அழைத்து பேசித்தான் பெண்ணை கொண்டுவந்து விட வைத்தார்கள். ஆனால், இப்படி குற்றுயிராக பெண் வந்து சேர்ந்ததால் ஊர் மக்கள் கோபமாகி விட்டார்கள். சென்சிடிவான மேலூர் பகுதியில் ஒரு ஏழை சிறுமி பாதிக்கப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகளோ, முக்கிய அரசியல் கட்சிகளோ, மகளிர் ஆணையமோ கண்டனம் தெரிவிக்கவில்லை. இதுதான் மக்கள் மத்தியில் கோவத்தை உண்டாக்கியுள்ளது ” என்றனர்.

மாவட்ட காவல்துறையோ, “பெண்ணின் தாயார் கேட்டுக்கொண்டதால் உடனே வழக்கு பதிவு செய்யவில்லை. பிறகு, வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்தொம். நாகூர் ஹனிபாவிடம் விசாரித்ததில், அவனும் சிறுமியும் காதலித்ததாகவும், கடந்த 14-ம் தேதி சிறுமியை மதுரையிலுள்ள நண்பர் பெருமாள்கிருஷ்ணன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, பின்னர் பள்ளிபாளையத்திலுள்ள சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு சென்று அங்கு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், ஊரில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தாயார் தெரிவித்ததால் இருவரும் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், நாகூர் ஹனிபா மருந்தை துப்பியதாகவும், சிறுமி மருந்தை உடகொண்டதால் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் மருந்து சாப்பிட்டதை மறைத்து சிகிச்சை செய்ய வைத்ததாகவும் அதில் குணமாகாததால் சிறுமியை ஊருக்கு அழைத்து வந்து தாயாரிடம் விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். சிறுமி கூட்டுப் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை. உடலில் காயங்கள் இல்லை என்று மருத்துவ அறிக்கையில் தெரிவித்துள்ளதாக’ மதுரை எஸ்.பி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதிகப்பட்ட குடும்பத்துக்கு அமைச்சர் உதவி

இதற்கிடையில் சிறுமியின் தாயாருக்கு சத்துணவு சமையலர் வேலைக்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. பிரச்னையை அரசு தற்காலிகமாக அமைதிப்படுத்தினாலும் சிறுமி மரணத்தில் எழுந்துள்ள கேள்விகள் தொக்கி நிற்கின்றன…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.