2014ல் 6 ஆக இருந்த பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 18 ஆக உயர்வு!!

டெல்லி: ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற நான்கு மாநிலத்தில் பாஜகவும் ஆட்சியைப் பிடித்தன. இதையடுத்து பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை பாஜக அருணாச்சலப் பிரதேசம், கோவா, குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மணிப்பூரில் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்றதால், பாஜக நேரடியாக ஆளும் மாநிலத்தின் கீழ் வருகிறது. அதேபோல் அசாம், பிகார், ஹரியானா, மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, புதுச்சேரி, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சி நடக்கிறது. இந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் காங்கிரஸ் கட்சி பறிகொடுத்துள்ளது . இதையடுத்து, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் எண்ணிக்கை இரண்டாக‌ குறைந்துள்ளது.  சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணிகள் ஆட்சியில் உள்ளன. மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் மட்டும் ஆட்சி அமைத்து இருந்த நிலையில், தற்போது பஞ்சாபிலும் ஆட்சி அமைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.