போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுவது எப்படி? வட்டார கல்வி அலுவலர் விளக்கம்

புதுக்கோட்டை: துண்டு சீட்டுகளில் குறிப்பு எடுத்து படித்து வந்தால் போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம் என்று திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கு.கருணாகரன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே மேற்பனைக்காட்டில் இன்று(மார்ச் 13) நடைபெற்ற போட்டித் தேர்வு வழிகாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: “டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 6 முதல் 10 -ம் வகுப்பு புத்தகங்களை படித்தால் போதுமானது. அதில், ஆங்கில புத்தகம் படிக்கத் தேவையில்லை. ஒவ்வொரு புத்தகத்தையும் புரியும்படியாக வாசித்து, அவற்றில் இருந்து நோட்டுகளில் எழுதாமல், துண்டு சீட்டுகளில் குறிப்பு எடுத்து படிக்க வேண்டும். தினமும் 12 மணி நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். அதிகபட்சம் 3 நாட்களில் ஒரு புத்தகம் வீதம் குறிப்பு எடுத்துவிடலாம். அதன் பிறகு துண்டு சீட்டை மட்டுமே படிக்க வேண்டும். படித்த புத்தகங்களை மறுபடியும் படிக்கக்கூடாது.

போட்டித் தேர்வுக்காக தயாராவோர் முதலில் படிப்புக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். அதோடு, ஆர்வம், அக்கறை, முழு ஈடுபாட்டோடு படித்தால் 100 நாளில் அரசு வேலைக்கு செல்லலாம். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் இணைப்பு, சுவரில்லா குடிசை வீட்டில் வசித்து வந்தேன். எனது வறுமையின் கொடுமையில் இருந்து வெளியேறுவதற்காக போட்டித் தேர்வுக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற்றேன் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், கிராம நிர்வாக அலுவலர் மு.ராஜா, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் எஸ்.நூர்முகமது, தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தின் இளநிலை உதவியாளர் மு.அசரப் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊராட்சி உறுப்பினர் மு.முமகது மூசா செய்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.