தலைமைமீது விமர்சனம்: தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம்… 

சென்னை: காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்வதில் இருந்து அமெரிக்கை நாராயணன் நீக்கம் செய்யப்படுவதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களே காங்கிரஸ் கட்சியின் தலைமை, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ள ஜி 23 தலைவர்கள் என்கிற மூத்த தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து விவாதம் நடத்துவதற்காக கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் நடத்தினர்.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், செயற்குழு உறுப்பினர் அமெரிக்கை நாராயணன் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து கருத்து தெரிவித்தார். அவரது பிரத்யேக பேட்டி பத்திரிகை டாட் காம் இணையதளத்தின் யுடியூப் சேனலிலும்  வெளியானது.

அதில்,  காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் தலைமை பதவியில் இருந்து விலக வேண்டும். நேரு குடும்பத்தினரின் தலைமை சரி இல்லை. ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கத் தகுதி இல்லை. பிரியங்காவும் வெளியேற வேண்டும் என்று அதிரடியாக விமர்சனங் களை வைத்திருந்தார். அமெரிக்கை நாராயணனின் இந்த கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அமெரிக்கை நாராயணன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   “காங்கிரஸ் சார்பாகத் தொலைக்காட்சி விவாதங்களில் இனி அவர் பங்கேற்க கூடாது. அவர் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார் என்று என்று அறிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரியின் இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கை நாராயணன் தன்னை அந்த பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

“என்னை விளக்கம் கேட்காமல், 30 வருடமாக கட்சிக்கு சொந்தப் பணத்திலும் உழைப்பிலும் புகழ் சேர்த்த நான், காங்கிரஸ் கொள்கைக்கு எதிராக பேசியது என்ன? தலைவர் அழகிரி விளக்கம் கேட்க வேண்டும்? கடந்த 3 நாட்கள் நான் பேசியது அனைத்தும் காங்கிரசை காப்பாற்றுவோம் என்றே!

என்னை நேரில் விளக்கம் கேட்காமல் சமூக தளத்தில் விளக்கம் கேட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பிரச்சினையை, மக்கள் சமூக தளத்தில் விசாரிக்க வழிவகுத்த அழகிரியே! இதோ ரஃபேல், பாஜகவின் லஞ்ச லாவண்யத்தை, தி.க.-வை திட்டியதுதான், கட்சியை விட்டு விலக்கக் காரணமா? அழகிரியே பதில் சொல் பதுங்காதே” என்று  டிவீட்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.