முதல்வர் ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து ட்விட்டரில் அவதூறு பதிவிட்டதாக பாஜக நிர்வாகி கைது

சேலம்: துபாய் பயணத்தின்போது தமிழக முதல்வர் அணிந்திருந்த ஆடை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்தியை பரப்பியதாக பாஜக நிர்வாகி ஒருவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் எக்ஸ்போவில் கலந்துகொண்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 5 நாட்கள் துபாய்க்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது. அருள் பிரசாத் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலின் அணிந்து சென்ற ஓவர் கோட் ரூ.17 கோடி என்றும், அந்தத் தகவலை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

இதனைப் பார்த்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முதல்வர் குறித்து அவதூறு பரப்பிய நபர் மீது, தவறான விஷயங்களை மக்களிடம் பரப்பியுள்ள சம்பவம் தொடர்பாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘டேக்’ செய்து பதிவிட்டிருந்தார். மேலும், அருள் பிரசாத் ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து பரப்பிய அவதூறு தகவல்களையும் பதிவு செய்திருந்தார்.

இது தொடர்பாக தமிழக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு செய்தி பரப்பியவர் சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த அருள் பிரசாத் என்பதும், அவர் பாஜக மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருவது தெரியவந்தது.

இந்நிலையில், சேலம் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலசுப்ரமணியம், எடப்பாடி காவல் நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் மீது அவதூறு பரப்பிய அருள்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். புகார் மனுவில், ‘முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதோடு மட்டுமல்லாமல், கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மீது, எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் விசாரணை நடத்தி, பாஜக நிர்வாகி அருள் பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து, அவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.