பொருளாதார நெருக்கடி | மின் பற்றாக்குறை காரணமாக இருளில் மூழ்கிய இலங்கை தெருக்கள்

கொழும்பு: மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் அணைக்கப்படுவதாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அங்குள்ள 22 மில்லியன் மக்கள் தினமும் 13 மணிநேரம் மின்வெட்டால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக இலங்கையில் தெருவிளக்குகள் இரவில் அணைக்கப்படுவதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இலங்கை மின்சாரத்துறை அமைச்சர், பவித்ரா வன்னியராச்சி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மின்சாரத்தை சேமித்து உதவுவதற்காக நாடுமுழுவதும் உள்ள தெரு விளக்குகளை அணைக்குமாறு அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.

இந்தியாவிலிருந்து 500மில்லியன் டாலர் கடன்மூலம் பெறப்படும் டீசல் இறக்குமதி சனிக்கிழமையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் பிரச்சினையை முற்றிலும் தீர்க்காது. அந்த டீசல் வந்தவுடன் நிலைமை ஓரளவுக்கு சமாளிக்கமுடியும் என்றாலும், மழைக்காலம் வரையில் மே மாதத்தில் சில மணி நேரம் வரை மின்தடைகள் தொடரும். நீர்மின் திட்டங்கள் நடந்து வந்த நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இருப்பு வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது. அதேசமயம், வறண்ட மற்றும் வெப்பகாலத்தின் தேவை மிகவும் உச்சமைடந்துள்ளது. இப்போதைக்கு எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்.

மூடப்பட்ட பங்குச்சந்தை: பங்குத்தரகர்களின் வேண்டுகோளுக்கிணங்க வழக்கமாக 4 மணிநேரம் நடைபெறும் இலங்கையின் பங்குச்சந்தை வர்த்தகம், நீடித்து வரும் மின்வெட்டால் இந்த வாரம் முழுவதும் இரண்டு மணிநேரம் மட்டுமே நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை பங்குச்சந்தை தொடங்கிய பின்னர், பங்குகள் சரியத் தொடங்கின. இரண்டு நாட்களில் மூன்றாவது முறையாக இன்றும் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 5 சதவீதத்திற்கும் கீழாக குறையத் தொடங்கியதும் கொழும்பு பங்குச் சந்தை 30 நிமிடங்களுக்கு வர்த்தகத்தை நிறுத்தியது.

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளதால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத சூழலில் இலங்கை உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாகவே இலங்கையின் அந்நிய கடன் தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. இதனால் இலங்கையின் அந்நியசெலாவணி கையிருப்பு குறைந்தது. இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு அந்நாட்டின் தவறான பொருளாதாரக் கொள்கையே அடிப்படைக் காரணம் என்று கூறப்படுகிறது.

பிப்ரவரி நிலவரப்படி இலங்கையிடம் 2.31 பில்லியன் டாலர் மட்டுமே கையிருப்பு உள்ளது. இதனால் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.