சர்வதேச சந்தை மதிப்பை விட பீப்பாய்க்கு 35 டாலர் குறைவாக இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்ணெய் சப்ளை: ரூபாய் – ரூபிள் அடிப்படையில் வழங்க ஒப்புதல்

புதுடெல்லிள்: இந்தியாவுக்கு அதிகபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ரஷ்யா மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டிலிருந்து எவ்வித வர்த்தக உறவுகளையும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ள முன்வரவில்லை.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து ஏற்கெனவே இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான ஐஓசி, ஹெச்பிசிஎல் ஆகியன கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டன.

இந்நிலையில் சர்வதேச சந்தை மதிப்பை விட ஒரு பீப்பாய்க்கு 35 டாலர் விலை குறைவாக கச்சாஎண்ணெய் சப்ளை செய்ய ரஷ்யாமுன்வந்துள்ளது. இந்த ஆண்டு1.5 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை தங்கள் நாட்டிடமிருந்து இந்தியா வாங்கும் என ரஷ்யா எதிர்பார்க்கிறது.

ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க முன்வராத சூழலில் ஆசியநாடுகளுக்கு அதிக அளவில்,சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இப்பிராந்தியத்தில் அதிக அளவில் எண்ணெய் நுகர்வு நாடாக இந்தியா உள்ளது.

மேலும் இந்தியாவிடமிருந்து ரூபாய் மற்றும் ரூபிள் அடிப்படையில் கரன்சியைப் பெற்று விநியோகம் செய்யவும் ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் பிஜேஎஸ்சி நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அதிக அளவில் சப்ளை செய்ய தயாராக உள்ளது. நீண்ட கால அடிப்படையில் ஆண்டுக்கு 1.5 கோடி பீப்பாய்களை அளிப்பதற்கு ஒப்பந்தம் செய்யவும் தயாராக உள்ளது.

பொருளாதார ரீதியாக ஆதாயமளிப்பதாக இருந்தால் மட்டுமே ஐஓசி எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்யும். சரக்குக் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில் ரஷ்யா அளிக்கும் சலுகை விலை ஓரளவுக்கு சாதகமான விஷயம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் ரஷ்ய வெளியுறவு..

இரண்டு நாள் பயணமாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாரோவ் தலைநகர் டெல்லி வந்துள்ளார். முதல் கட்டமாக அவர் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் இருதரப்பு வர்த்தக உறவுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

அதிபர் விளாடிமிர் புதின் அனுப்பிய பிரத்யேக தகவலை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளித்தார். இத்தகைய வாய்ப்பு தனக்கு கிடைத்தது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

வலுவான உறவு

பிரதமர் நரேந்திர மோடியும், அதிபரும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இந்தியாவில் நடத்தப்பட்ட ஆலோசனை விவரங்களை அதிபருக்கு தெரிவிப்பேன் என்றுலாரோவ் குறிப்பிட்டார். பல்வேறுஇக்கட்டான தருணங்களிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு மிகவும் வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்டார். எரிசக்தி, அறிவியல் தொழில்நுட்பம், பார்மசூடிக்கல்ஸ் உள்ளிட்ட துறைகளில் கூட்டாக செயல்பட தொடர்ந்து ஆர்வமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

கரோனா காலகட்டத்துக்கு அடுத்து மிகவும் இக்கட்டான சூழலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், இரு நாடுகளிடையிலான உறவு வலுவுடன் தொடர்வதாகவும் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் தலீப் சிங்,அமெரிக்கா விதித்துள்ள தடையைமீறி செயல்படும் நாடுகள் அதற்குரிய பலனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என எச்சரித்திருந்தார்.

அமெரிக்கா விதித்துள்ள தடைகுறித்து நட்பு ரீதியில் விளக்குவதற்காக தான் இந்தியா வந்துள்ளதாக குறிப்பிட்ட தலீப் சிங், இப்பிரச்சினைக்கு முன்கூட்டியே தீர்வு காண விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தை பெரிதுபடுத்தி விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க விரும்பவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் பிஜேஎஸ்சி நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு அதிக அளவில் சப்ளை செய்ய தயாராக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.