டெல்லியில் தி.மு.க. அலுவலகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

புதுடெல்லி:
பாராளுமன்றத்தில் 7 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்ததின் அடிப்படையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கடந்த 2013-ம் ஆண்டு டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் தி.மு.க. கட்சிக்கு அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
அந்த இடத்தில் 3 தளங்களுடன் கூடிய பிரமாண்ட அறிவாலய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. உயரமான 4 தூண்களை கொண்ட முகப்பு, நுழைவாயிலில் அண்ணா- கலைஞர் இருவரது மார்பளவு சிலைகள், கட்சி நிர்வாகிகள் ஆலோசிப்பதற்கான இடம், தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கான அறைகள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட நூலகம், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கான அறைகள் என விசாலமான வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த அறிவாலய கட்டிட திறப்புவிழா இன்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். டி.ஆர்.பாலு எம்.பி. முன்னிலை வகித்தார். தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா- கலைஞர் அறிவாலயம் அலுவலகத்தை திறந்து வைத்து, கட்சி அலுவலகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலையை திமுக எம்.பி., டி.ஆர். பாலு திறந்து வைத்தார். மார்பளவு அண்ணா சிலையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
விழாவில் சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ், வைகோ, ப.சிதம்பரம், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.