‘அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த ஐயா ஸ்டாலின்…’ நெகிழ்ந்து போன சீமான்

Stalin asks about Seeman health: சென்னையில், செய்தியாளர் சந்திப்பின் போது மயக்கம் அடைந்த சீமானிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்த நிலையில், சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவொற்றியூரில் உள்ள அண்ணாமலை நகர் பகுதிகளில் வீடுகள் இடிக்கப்படுவதாக வெளியான தகவலையடுத்து, அங்கு நேரில் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். அப்போது, அந்த மக்களிடம் நம்பிக்கையோடு இருங்கள். வீடுகளை இடித்துவிடுவார்கள் என்று அஞ்ச வேண்டாம். எந்த கட்டிடம் இடித்தாலும் நாம் தமிழர் கட்சி போராட்டம் நடத்தும். குடிநீர், மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள வீடுகளை திடீரென ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்க வருவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் சொத்து வரி உயர்வு, அமைச்சர் ராஜகண்ணப்பன் விவகாரம், திமுக கவுன்சிலர்கள் விவகாரம் என பல்வேறு விவகாரங்களில் திமுக அரசை விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்: பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த நபர்; சேஃப்டி பின்னில் குத்தி எதிர்கொண்ட தைரியப் பெண்!

அப்போது, திடீரென சீமான் மயங்கி விழுந்தார். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சீமானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.

அதிக நேரம் வெயிலில் நின்றுகொண்டிருந்ததாலும், வெயிலிலே நின்றுக் கொண்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்ததாலும்ம், தொடர் அலைச்சல், ஓய்வின்மையாலும் சீமான் சோர்வுற்றதாக அக்கட்சி விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், சீமானிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசியில் நலம் விசாரித்துள்ளார். இது தொடர்பாகச் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.