பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் புரி ஜெகன்நாதர் கோயிலில் 40 மண் அடுப்புகள் சேதம்

புரி: புரி ஜெகன்நாதர் கோயிலில் பக்தர்களுக்கு  வழங்கும் பிரசாதம் தயாரிக்க பயன்படும் 40 மண் அடுப்புகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். ஒடிசா மாநிலம், புரியில் உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயில் உள்ளது. இதில் தினமும் 50 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ‘மகா பிரசாதம்’ என்று அழைக்கப்படும் இதை தயாரிப்பதற்கு, 240 மண் அடுப்புகள் உள்ளன. இதை சமைப்பதற்காக 400 சமையல்காரர்கள், 200 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கோயில் பிரசாத தயாரிப்பு கூடத்தில் உள்ள 40 மண் அடுப்புகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து கேள்விப்பட்டதும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர், ஆட்சியர் கூறுகையில், ‘‘சிசிடிவி.யில் பதிவான காட்சிகளை வைத்து, இதை செய்தவர்கள் யார் என்பது கண்டுபிடிக்கப்படும். இந்த சம்பவத்தால் 2 நாட்களுக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதில் பிரச்னைகள் ஏற்படக்கூடும்,’’ என்றார். ‘மகா பிரசாதம்’ தயாரிப்பதில் சமையல்காரர்கள் இடையே நடந்த மோதலால், இந்த அடுப்புகள் சேதப்படுத்தப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.